முத்துசாமியின் எடுப்பார் கைப்பிள்ளைகளுக்கே வாய்ப்பா? – பட்டியல் போட்ட திமுக நிர்வாகி!

Published On:

| By Aara


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் நேற்று (ஜனவரி 11) அறிவிக்கப்பட்டார்.

இன்று (ஜனவரி 12) காலை 10. 15 மணிக்கு ஈரோடு ஜி.ஹெச்.அருகே ஏற்கனவே கடந்த இடைத்தேர்தலுக்கு பணிமனை அமைத்த இடத்திலேயே இந்த இடைத் தேர்தலுக்கான பணிமனையும் அமைக்கப்பட்டு, அங்கே வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், வேட்பாளர் சந்திரகுமார், அமைச்சரும் மாசெவான முத்துசாமி ஆகியோர் மட்டுமே பேசினர்.

இந்நிலையில் இடைத் தேர்தலில் திமுக சார்பாக சீட்டு கேட்ட ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளரான செந்தில்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு திமுகவுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கூட செந்தில்குமாரிடம் இதுகுறித்து நிர்வாகிகள் விசாரித்தனர்.

அப்படி என்ன பதிவிட்டார் அவர்?

”கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஏற்பட்ட துரோக வலியினால் இனிமேல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்வதில்லை என எனது முகநூலில் பதிவு செய்திருந்தேன்.

அதுபோலவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருப்ப மனு கொடுக்கவில்லை. அதேபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என வந்த பின்பும் நான் கேட்க வேண்டாம் என அமைதியாகத்தான் இருந்தேன்.

ஆனால், சமூக ஊடங்களிலும், தினசரி நாளிதழ் மற்றும் பல்வேறு ஊடகங்கள் எனது பெயரை முன் நிறுத்தியதும், அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர், அவசியம் கேள் இந்த முறை உனக்குத் தான் வாய்ப்பு என உற்சாகமூட்டியதும், நானும் சராசரி மனிதனாய் பதவி ஆசை ஏற்பட்டு, அனைத்து தகுதிகளும் இருப்பதாய் எனக்கு நானே எண்ணிக்கொண்டு அதற்கான முயற்சியை முன்னெடுத்தேன்.

நீண்ட நாட்களாக கட்சி பணியாற்றி வந்தாலும், ஈரோடு தொகுதி பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் அல்லது மாற்று கட்சியிலிருந்து வரும் விவிஐபிகளுக்கு என்று ஒதுக்கப்படுவதால் என்னைப்போன்றவர்களின் பெயர்கள் பரிசீலனைக்கே எடுக்கப்படுவதில்லை.

1980ல் சாயிநாதன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்) காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது,
1984, 1989 சுப்புலட்சுமி ஜெகதீசன் (மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர் ),
1991 கணேசமூர்த்தி மாவட்ட செயலாளர்,(மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர்),
1996, 2001 NKK பெரியசாமி மாவட்ட செயலாளர் (பவானி தொகுதியை சேர்ந்தவர்)
2006 NKKP ராஜா மாவட்ட செயலாளர் (பவானி தொகுதியை சேர்ந்தவர்),
2011 சு.முத்துசாமி, (2010 ல் திமுக வில் இணைந்த பின்பு)
2016 வி.சி.சந்திரகுமார்,(2016 ல் திமுக வில் இணைந்த பின்பு)
2021 திருமகன் ஈவெரா , (காங்கிரஸ் கட்சி)

இப்படி ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஈரோடு தொகுதியை குறி வைப்பதால் என்னை போன்ற ஈரோட்டை பூர்வீகமாக கொண்ட கட்சி நிர்வாகிகளின் பெயர்கள் பரிசீலனைக்கே வராமல் போய்விட்டது.

கட்சியின் நலன் கருதி மாவட்ட செயலாளர்களை எதிர்த்து போராடியதால், அப்போதெல்லாம் எவ்வித பொறுப்பிற்கும் வர முடியவில்லை. தற்போது மாவட்ட செயலாளரை அனுசரித்து அவருடன் இருந்தாலும் வாய்ப்பை பெற முடியவில்லை.

ஏனென்றால் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன் என்பதாலும், இவன் எம்.எல்.ஏ ஆனால் கட்சியையும் கைப்பற்றி விடுவானே என்றும், எம்.எல்.ஏ என்ற நிலை மட்டும் இருந்தால் பரவாயில்லை அடுத்த நிலை அங்கீகாரத்திற்கு வந்து விடுவானே என்றும் பயந்த சிலர் எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் சில துரோகங்களால் நான் வீழ்த்தப்படுகிறேன். துரோகம் செய்யும் நபர்கள் மாறுகிறார்களே தவிர பாதிக்கப்படுபவன் நான் மட்டுமாகவே இருக்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்த நல் உள்ளங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செந்தில்குமார் பதிவிட்டுள்ளார்.

-வேந்தன்

பெரியார் குறித்து சர்ச்சை… சீமான் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜகவும் புறக்கணிப்பு – அண்ணாமலை அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share