உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வரவேற்போம். இன்பநிதி தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக வருவார் என்று திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் புகழ் மாலை சூட்டியுள்ளனர்.
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
அமைச்சராக பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி , “அமைச்சரானதும் வாரிசு அரசியல் என்று என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதனை தடுக்க முடியாது.
என்னுடைய செயல்பாடுகள் மூலமாகத் தான் அந்த விமர்சனத்தை தவிர்க்க முடியும்.” என்று தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “உதயநிதி அமைச்சராகி தான் தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? அவர் அமைச்சரானால் தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களுக்கெல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார்.” என்று விமர்சித்திருந்தார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதனால் தான் குறுகிய காலத்தில் அவரால் இந்த உயரத்தை எட்ட முடிந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது வாரிசு அரசியல்.” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளனர்.
மேலும், உதயநிதியின் மகன் இன்பநிதி முதல்வராக வேண்டும் என்றும் ஆரூடம் தெரிவித்துள்ளனர். அமைச்சர்களின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
திருச்சியில் பேசிய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “வாரிசு அரசியல் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
உங்களுக்கு வாரிசு இல்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? எடப்பாடி பழனிசாமியால் முடிந்தால் வாரிசு அரசியல் செய்யட்டும்.
எங்களிடம் சாதாரண கிளை கழக செயலாளர் கூட முதல்வராக முடியும் என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நீங்கள் எப்படி முதல்வரானீர்கள் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். திமுக-வினர் நன்றியோடு இருப்பவர்கள்.
எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்திற்கும், தலைவருக்கும் என்றும் அவர்களோடு இருந்து தலைவணங்கி நேர்மையாக பாடுபடுவோம்.
திமுகவிற்கு விசுவாசமாக இல்லாமல் நாங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்கப் போகிறோம். நாங்கள் உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வாழ்க என்று தான் சொல்லுவோம்.
வாரிசு என்று கூறி எங்களை மிரட்டி விட முடியாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு தருகிற ஒரே இயக்கம் திமுக மட்டும் தான்.” என்றார்.
கடலூரில் பேசிய திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜன், “என் வீட்டில் பிறந்த மகன், என் கட்சி கொடியை தூக்கி பிடிக்காமல் யார் கட்சி கொடியை தூக்கி பிடிப்பான்.
எங்கள் மரியாதைக்குரிய தளபதி ஸ்டாலின் மகன் உதயநிதி அமைச்சராக வந்துள்ளார். நாளைக்கு துணை முதல்வராக கூட ஆவார். இந்த கட்சியில் பெரிய பொறுப்பிற்கு கூட வரலாம். உழைக்கிறவர்கள் முன்னேறுவதில் உனக்கென்ன பொறாமை மிஸ்டர் அண்ணாமலை. கழகம் தான் கலைஞர், கலைஞர் தான் கழகம் என்பதில் கருத்து வேறுபாடு கொள்ளாமல் கழகக்கொடியை தூக்கி பிடிக்கிற தொண்டர்கள் கூட்டம் திமுக.
அதனுடைய விளைவாகத் தான் எங்களது தளபதி முதலமைச்சர் ஆனார். அதனை தொடர்ந்து எங்களது சின்னவர் ஜமீன்தார் உதயநிதி அமைச்சராகி உள்ளார். நாளைக்கு எங்களுக்கு இன்னொரு ஆசை இருக்கிறது. அதுவரைக்கும் ஆண்டவன் எனக்கு உயிர் கொடுக்க போவதில்லை.
இன்பா ஐயாவையும் அடுத்த முதல்வராக்கிவிட்டு சாக வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. அந்த குடும்பம் தான் நமக்கு சரியாக வரும். இன்பா ஐயா இந்த நாட்டிற்கு முதலமைச்சராக வருவார். இது ஒவ்வொரு திமுக தொண்டன் நெஞ்சிலும் ஊறிப்போன ஆசை.” என்றார்.
விழுப்புரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “வாரிசை பற்றி அதிமுகவினர் பேசலாமா? எம்ஜிஆரை பற்றியும், ஜெயலலிதாவை பற்றியும் உங்களுக்கு முழுமையாக தெரியுமா? எம்ஜிஆர்-க்கு பிறகு அவரது துணைவியார் ஜானகி முதலமைச்சராக வந்தார்.
ஜானகி அம்மையார் வந்தவுடன் ஜெயலலிதா, நான் தான் உண்மையான வாரிசு என்று கூறினார். வந்தவாசி தொகுதியில் எம்.பி-யாக இருந்தவருடைய மகன் தான் சி.வி.சண்முகம். வாரிசு பற்றி பேச சி.வி.சண்முகத்திற்கு தகுதி இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி எதிர்க்கட்சிகள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது முன்வைக்கப்பட விமர்சனங்களை திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாக சாடி பேசி வந்த நிலையில், திமுகவின் அடுத்த வாரிசாக அவர்கள் இன்பநிதியை முன்னிறுத்தி வருகின்றனர்.
தற்போது வெளிநாட்டில் கல்லூரியில் படித்து வரும் இன்பநிதிக்கு கழக மூத்த அமைச்சர்கள் பலரும் இப்போதே அரசியல் அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் தற்போது முக்கிய பேசு பொருளாக இருந்துவரும் வாரிசு அரசியலுக்கு மீண்டும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. இது மட்டுமல்ல…பொதுமக்களை முகம் சுழிக்க வைப்பதாகவும் உள்ளது
செல்வம்
சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளை தளர்த்திய நீதிமன்றம்!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய சொலிசிட்டர் ஜெனரல்!