திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் “சென்னை இலக்கியத் திருவிழா 2023″யை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் உரையாற்றினார்.
திசைதோறும் திராவிடம் பிரிவில் 12 புத்தகங்களும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத்திட்டம் பிரிவில் 29 புத்தகங்களும், இளந்தளிர் இலக்கிய திட்டம் பிரிவில் 36 புத்தகங்களும், சங்க இலக்கியங்கள், பத்துப்பாட்டு 10 புத்தகங்கள் உள்பட 100 நூல்கள் வெளியிடப்பட்டன.
மேடையில் உரையாற்றிய முதலமைச்சர், “தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!. என்று புரட்சிக்கவிஞரால் போற்றப்பட்ட தமிழுக்காக நாம் கூடி இருக்கிறோம்.
அதுவும் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள நூற்றாண்டு நூலகக் கட்டடத்தில் கூடி இருக்கிறோம். இதைவிடப் பொருத்தமான இடம் ஏதும் இருக்க முடியாது.
இந்த இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைப்பதில் பெருமைக் கொள்கிறேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முத்தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழின் பெருமையை, செழுமையை, இளைய தலைமுறைக்கு கற்பிக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழைப் படிப்பது தமிழில் படிப்பது வேறு, தமிழில் படிப்பது மிக மிக முக்கியமானது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி என்பது தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. திமுகவின் ஆட்சி காலம் எப்போதும் தமிழ் ஆட்சி காலம்தான். தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில்தான் நடத்தப்பட்டது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது கலைஞர்தான். மொழியைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்த இனம் தமிழினம்.
எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் வள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்று வரை இருக்கின்றன.
இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வையும் இலக்கிய உணர்வையும் ஊட்ட வேண்டும். மாணவர்கள் சமுதாயத்திற்கு சிறு பருவம் முதலே தமிழ் உணர்வை உண்டாக்க வேண்டும்.
இலக்கியம் என்பது பொழுதுபோக்காக இல்லாமல், நோக்கும் போக்குமாக மாற வேண்டும்.
மதவாதத்தாலும் சாதியவாதத்தாலும் மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது, ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக ஆக்கும்.
இலக்கியம் தான் ஒரு மனிதனைப் பண்படுத்தும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும் – என்பதை விட தன்னம்பிக்கை வரி உலகத்தில் உண்டா?.
மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது, அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா
இறங்கியது தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?
ஹாக்கி உலக கோப்பை: வீரர்களுக்கு பம்பர் பரிசை அறிவித்த பட்நாயக்