புத்தாண்டு: திமுகவினருக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published On:

| By Selvam

dmk restrict new year meet stalin

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை இன்று (டிசம்பர் 30) அறிவுறுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தது. இதனை தொடர்ந்து டிசம்பர் 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மழை, வெள்ள பாதிப்பால் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ஆம் தேதிக்கும் பின்னர் தேதி குறிப்பிடாமலும் ஒத்திவைக்கப்பட்டது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தநிலையில், புத்தாண்டு பண்டிகையின் போது ஸ்டாலினை நேரில் சந்திக்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவரும்  முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மாநில அரசுக்கு ஆதரவு: ஆளுநர் ரவி உறுதி!

புத்தாண்டு கொண்டாட்டம் : போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வரும் சென்னை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share