நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஜூலை 3ஆம் தேதி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். நீண்ட நாட்களாக அவருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக தலைமையின் அழுத்தத்தின் பேரில் இந்த முடிவை அவர் எடுத்தார்.
இதையடுத்து நெல்லை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்வு செய்யும் கூட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த பின்னணியில்தான் ஆகஸ்ட் 2-ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் புதிய மேயர்கள் ஸ்டாலின் போடும் கணக்கு என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லைக்கு செல்வதாகவும் ஆகஸ்டு 4 ஆம் தேதி அவர்கள் கவுன்சிலர்களை அழைத்து கூட்டம் நடத்துவதாகவும் தெரிவித்திருந்தோம்.
அன்படியே இன்று ஆகஸ்ட் 4 காலை 10 மணி அளவில் நெல்லை தனியார் ஹோட்டலில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். முன்னாள் மேயர் சரவணன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் மத்திய மாவட்ட செயலாளரும் அதிக கவுன்சிலர்களை தனது ஆதரவாளர்களாக வைத்திருப்பவருமான அப்துல் வஹாப் எம்எல்ஏ, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 10.15 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் அதிகபட்சம் 20 நிமிடங்களில் முடிந்துவிட்டது.
கூட்டம் தொடங்கியதும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு… கடந்த காலங்களில் நெல்லை மாநகராட்சியில் திமுகவுக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளை விவரித்து, ‘இதையெல்லாம் தலைவர் கொஞ்சமும் விரும்பவில்லை. இனிமேலாவது எந்த பிரச்சினையும் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதனால் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதை தலைவரே முடிவு செய்து இந்த கவரில் கொடுத்து அனுப்பியுள்ளார்” என்று மூடப்பட்ட ஒரு கவரை உயர்த்தி காட்டினார்.
அதை பிரித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கொடுத்தார் தங்கம் தென்னரசு. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அந்த கவரின் உள்ளே இருந்த கடிதத்தை எடுத்த அமைச்சர் நேரு, ‘நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்படுகிறார். இவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று படித்தார்.
அத்தோடு கூட்டம் முடிவுற்றது. ஜூலை 9 தேதி மின்னம்பலத்தில் நெல்லையின் புதிய மேயர் யார்? வஹாப் கையில் பந்து! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அந்த செய்தியில், “ராஜினாமா செய்த மேயர் சரவணன் இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
எனவே புதிய மேயர் பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும். இந்த வகையில் கார்காத்தார் பிரிவை சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் பெயரை முதலில் குறிப்பிட்டிருந்தோம்.
இப்போது அதுவே நடந்திருக்கிறது. புதிய மேயராக தேர்வு செய்யப்பட்ட கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் மூன்றாம் வகுப்பு படித்தவர் என்றாலும் அரசியல் நிர்வாக அனுபவம் மிக்கவர் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris Olympics 2024: தங்கத்தைக் குறிவைக்கும் தடகள வீரர்கள்!
திருப்பத்தூர்: திடீரென சரிந்த ராட்டினம்… அந்தரத்தில் அலறிய மக்கள்… திக் திக் நிமிடங்கள்!