காமராஜர் தனது சொந்த காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் இன்று (அக்டோபர் 22) வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய ‘கர்மவீரரும் கலைஞரும் – திராவிட தலைவர்களின் மதிப்பீடு’ உள்ளிட்ட மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, “குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்ததால் ராஜாஜி தேர்தலில் தோல்வி அடைந்தார். ராஜாஜி தனது ஆட்சிக்காலத்தில் மூடிய பள்ளிகளைத் தான் காமராஜர் திறந்தார்.
காமராஜர் தனது சொந்த நிதியில் இருந்து பள்ளிகளைத் திறக்கவில்லை. அதனால் தான் அவரை கல்வி கண் திறந்த காமராஜர் என்கிறார்கள். தமிழகத்தில் கல்வி என்ற சொத்துக்கு பெரியார் என்ற தனி மனிதர் தான் காரணம்” என்று பேசியிருந்தார்.
ராஜீவ் காந்தியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், காமராஜர் குறித்து தான் பேசியதற்கு ராஜீவ் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மனதார வருந்துகிறேன்… சில தினங்களுக்கு முன்பு “கர்மவீரர் காமராஜரும் முத்தமிழறிஞர் கலைஞரும்”என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் காமராஜர் குறித்த நான் பேசியது காங்கிரஸ் கட்சி தோழர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தி உள்ளது.
காமராஜர் மீது பற்று கொண்ட தலைவர்களும் மற்றும் நாடார் சமூக அமைப்பினை சேர்ந்த தலைவர்களும் என்னிடம் அவர்களின் வருத்தத்தினை தெரிவித்தார்கள். காமராஜரை சிறுமைபடுத்தவோ, குறைத்து பேசவோ தனிப்பட்ட முறையில் எனக்கு எவ்வித தவறான நோக்கமும் இல்லை.
காமராஜர் தமிழ் பேரினத்தின் சொத்து. என் பேச்சினை வைத்து இந்தியா கூட்டணிக்குள் உரசல் என விஷம பிரச்சாரம் செய்து மதபாசிச கும்பலும், அடிமை அதிமுகவும் குளிர் காய விரும்புகிறது அதற்கு ஒருபோதும் என் பேச்சு இடம் தராது. நான் பேசியதன் மூலம் மனம் வருந்திய காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காமராஜரை நேசிக்கும் உறவுகளுக்கும் என் வருத்தத்தினை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த நாமக்கல் போலீஸ் டீம்… பாராட்டிய ஸ்டாலின்
விஜய் மாநாடு: 2 லட்சம் சதுர அடி… 50 ஆயிரம் இருக்கைகள் .. போலீஸ் அலர்ட்!