15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு திமுக துணை பொதுச்செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பேசுகையில்,
“பெண் என்றால் பேய் கூட இரங்கும் பேய் கூட இரங்க வேண்டிய பெண்மைக்காக மோடி இரங்கவில்லை என்றால் பேயைவிட மோசமானவரா மோடி என்று கேள்வி இன்றைக்கு இந்தியாவில் எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ஊழல், இன்னொரு பக்கம் எதேச்சதிகாரம், இன்னொருபக்கம் மதவாதம் இவை எல்லாம் சேர்ந்த பாஜக நம்மை பார்த்து சொல்கிறார்கள் ஊழல்வாதிகள், திமுக ஊழல் கட்சி, குடும்ப கட்சி என்று.
மிசா கொடுமையில் கலைஞர் கோபாலபுரத்தில் இருந்தார். அந்த வீட்டை அடகு வைத்து, மிசாவில் ஜெயிலில் இருந்த கட்சிக்காரர்களின் வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு அவர்களின் மனைவிகளுக்கு ரூ.100 , 200 என்று கலைஞர் தன் சொந்த பணத்தை அனுப்பி வைத்த குடும்பத் தலைவர் கலைஞர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் போர் இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுகின்ற போர்…
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஜனநாயகம் , சமத்துவம், சமதர்மம், மதச்சார்பின்மை இத்தனையும் காப்பாற்றுகின்ற போர்….
அரசியல் சட்டத்தை காப்பாற்றுகின்ற ஒரே தத்துவம் தமிழ்நாட்டில்தான் உள்ளது.
அந்த தத்துவத்தை தாங்கி நிற்கின்ற இந்த தலைவனை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.
அவருக்குப் பின் நிற்போம்…இந்திய குடியரசைக் காப்பாற்றுவோம் …. அரசியல் சட்டத்தைக் காப்பாற்றினால்தான் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்.
இந்த தேர்தலில் தனிமனித ஆதாயத்திற்கு இடமே இல்லை. இது ஒரு மிகப்பெரிய தத்துவம். எல்லா தலைவர்களும் மோடியை எதிர்க்கின்றனர்.
ஆனால் அவர்கள் கையில் மருந்து இல்லை. மோடி என்ற மதவாதத்தை எதிர்ப்பதற்கு அவர்களிடம் பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட தத்துவம் என்ற மருந்து இல்லை.
மோடி என்ற தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்றால் படை மட்டும் இருந்தாலோ அல்லது தலைவன் மட்டும் இருந்தாலோ போதாது, தத்துவம் இருக்க வேண்டும்.
அந்த தத்துவம் இருக்கின்ற இடம் இந்தியாவிலேயே ஒரு இடம் தமிழ்நாடு மட்டும் தான். தத்துவம் இல்லாமல் எந்த தலைவனும் வெற்றி பெற முடியாது.
மோடியை எதிர்ப்பதற்கு, அவர்கள் ஆட்சி சரியில்லை என்று சொல்வதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் மோடி என்ற மதவாத தத்துவத்தை, ஆரிய மாடலை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் அந்த ஆரிய மாடலை ஒழிக்க கூடிய ஒரே சக்திமிக்க தத்துவக் கோட்பாடு பெரியார், அண்ணா, கலைஞர், திராவிட மாடல் என்கின்ற இந்த கோட்பாடு தான்.
இந்த தத்துவத்தோடு போனால் தான் எதிரியை வீழ்த்த முடியும். அந்த தத்துவம் நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது” என்று கூறினார்.
“அனைவரிடமும் சமூகவலைதள கணக்கு” : ஸ்டாலினின் டிஜிட்டல் பரப்புரை!
ஆளுநரால் வாக்குகள் அதிகரிக்கும் : மு.க.ஸ்டாலின்