திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இந்த நிகழ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கம் வகித்தனர்
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா பேசும்போது, “32 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 34 வயதில் மாவட்ட செயலாளராகவும், 37 வயதில் கேபினட் அமைச்சராகவும் ஆனேன்.
இவ்வளவு பதவியையும் கலைஞர் எனக்கு தந்தார். ஸ்டாலின் என்னை துணை பொதுச்செயலாளர் ஆக்கினார்.
இங்கே பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த மேடைக்கு வரவில்லை. அவர் வந்திருந்தால் அவருக்கும் எனக்கும் ஒரு போட்டியே வந்திருக்கும்.
ஸ்டாலின் செயல் தலைவரான போது மேடையில் பேசிய துரைமுருகன், ‘தம்பி உன்னை நான் தூக்கி வளர்த்தேன். என் அரவணைப்பில், பாதுகாப்பில் இருந்தாய். உன் தலைமையை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
முதலமைச்சரான போது, ‘தம்பி நான் பார்த்து வளர்ந்த பிள்ளை. என்னுடைய அரவணைப்பில், கதகதப்பில் இருந்தாய்’ என்று சொல்லிக்கொள்ளும் தகுதியும் உரிமையும் அவருக்கு மட்டும் தான் இருந்தது.
எனக்கு ஓர் ஆசை, இன்னும் 20 வருடமாவது இருப்பேன். 20 ஆண்டுகளுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்திற்கு வரும்போது ‘தம்பி என்னுடைய பொறுப்பில் தான் ஸ்டாலின் உன்னை விட்டு சென்றார்’ என்று சொல்லும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி.
அரசியல் கட்சியினுடைய தலைமைக்கு வர வேண்டும் என்றால் அறிவு, ஆற்றல், உழைப்பு , தியாகம் வேண்டும். இது பெரியார் காலத்தில் அண்ணாவுக்கு இணையாக பல தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் அண்ணா மட்டும் தான் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
அண்ணாவுக்கு பிறகு கலைஞருக்கு தான் மக்கள் ஏற்பு இருந்தது. எதிர்கால தலைமைக்கு உதயநிதியிடம் தான் ஏற்பு இருக்கிறது.
மற்ற அணிக்கும் இளைஞரணிக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் தான் இந்த தத்துவத்தை காப்பாற்ற போகிற எதிர்கால தலைவர்கள். இங்கிருந்து தான் துணை பொதுச்செயலாளர், பொருளாளர், தமிழக அமைச்சர்கள் வருவார்கள். ஆனால் ஆட்சி என்பது வேறு. கொள்கை என்பது வேறு.
மோடியையும், அமித்ஷாவையும் எதிர்ப்பதற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல கட்சிகளும் தலைவர்களும் உள்ளனர். ஆனால் அவர்களிடம் போதுமான தத்துவம் இல்லை.
மோடி ஏன் மத்தியபிரதேசத்தில் ஸ்டாலினை பற்றி பேசுகிறார். அவரை பொறுத்தவரை ஸ்டாலின் என்பவர் தனி மனிதரல்ல. அவருக்கு பின்னால் தத்துவம் இருக்கிறது. தனி மனிதரை வீழ்த்துவது எளிது. தத்துவத்தை வீழ்த்த முடியாது.
இவருக்கு பின்னால் தத்துவம் இருப்பதால் இவரை வீழ்த்த முடியாது. தத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல பெரியார், அண்ணா, கலைஞரை படியுங்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
ஜெய்ஷாவின் நிறுவன மதிப்பு உயர்ந்தது எப்படி?: அமித் ஷாவுக்கு உதயநிதி கேள்வி!
பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுடன் நிற்கிறோம்: கனிமொழி எம்.பி