dmk protest against crpf exam

சிஆர்பிஎஃப் தேர்வு: போராட்டத்தை அறிவித்த திமுக!

அரசியல்

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஏப்ரல் 17 ஆம் தேதி திமுக போராட்டம் நடத்த உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சிஆர்பிஎஃப்-ல் உள்ள 9,212 பணியிடங்களுக்கான தேர்வு அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சிஆர்பிஎஃப் கணினி தேர்வை தமிழ் மொழி உட்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்றும் இந்தி பேசும் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு தான் சிஆர்பிஎஃப் தேர்வு அறிவிப்பு சாதகமாக உள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் சிஆர்பிஎஃப் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்த முடியும் என்றும் பிற மாநில மொழிகளில் நடத்த முடியாது என்றும் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சிஆர்பிஎஃப் தேர்வை இந்தியில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் மொழியில் தேர்வை நடத்த வலியுறுத்தியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்வில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாய்ப்பினை மறுக்கப்படுவதை உணர்ந்த கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இப்பணியில் சேருபவர்களின் தகுதியென்பது, நல்ல உடல் வலிமை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம் ஆகியவையே அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் எனும் போது, இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக இதனை கட்டமைக்க முயற்சிக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். அதற்கு மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்.

இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணித்தே தீருவேன் என்றும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் இந்தியை மட்டுமே கட்டாயமாக்குவேன் என்றும், இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் கருதப்படும் என்றும் பாசிச பா.ஜ.க. அரசு சர்வாதிகார தன்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பது தான் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே முழக்கமாகும். ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என்று பாசிச, சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதை தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நடைபெறவுள்ள சி.ஆர்.பி.எப். தேர்வில் இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சமவாய்ப்பு பெறும் வகையில்,

தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறு அறிவிப்பு வழங்கிட, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில்,

வரும் 17.04.2023 அன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம், “சாஸ்திரி பவன்” அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

125 அடி அம்பேத்கர் சிலை: சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார்!

’நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால்..’: அண்ணாமலைக்கு சீமான் சவால்!

dmk protest against crpf exam
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *