திமுக சொத்து பட்டியலை அண்ணாமலை தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா அல்லது கட்சிக்காக வெளியிட்டாரா என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் கோடைக் காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (ஏப்ரல் 15) கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலை ஆட்சியில் இருக்கக்கூடிய திமுகவின் ஊழல் குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கிறார். எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவராக இருந்து ஊழல் பட்டியலை வெளியிட்டாரா? அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை என்கின்ற நபர் வெளியிட்டாரா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அப்படி பாஜகவின் சார்பாக அவர் பட்டியலை வெளியிட்டிருந்தால், பாஜக ஆட்சி செய்கின்ற மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்ற மாநிலமான ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுங்கட்சிகளின் ஊழல் பட்டியலை அந்தந்த மாநிலங்களின் பாஜக தலைவர்கள் வெளியிட உள்ளார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.
அண்ணாமலை தனிப்பட்ட முறையில் பட்டியலை வெளியிட்டிருக்கிறாரா அல்லது பாஜக சார்பாக வெளியிட்டிருக்கிறாரா என்பதற்கு ஏற்றவாறு எங்களது பதில்கள் இருக்கும்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் ஆணவக் கொலை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, “வாழ்கின்ற சமூகம் காலத்திற்கு ஏற்றவாறும் பெற்ற பிள்ளைகளின் உணர்வுகளையும் மதித்து செயல்பட்டால் இதுபோன்ற ஆணவக் கொலைகள் நடக்காமல் தவிர்க்கலாம்” என்றார்.
மேலும் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்த கேள்விக்கு, “இது எல்லாம் ஒரு பெரிய செய்தி இல்லை. இதற்கெல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தைக் கழிக்க வேண்டிய அவசியமில்லை.
இதுபோன்ற சாதாரண நிகழ்வுகளால் உண்மையான முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் அழுத்தம் குறைந்து விடுகிறது.
மேலும், அண்ணாமலை மட்டும் தான் இந்த நாட்டிற்காக பிறந்தவர் போல பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நாட்டிற்காக அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் உழைத்தவர்கள், தியாகம் செய்தவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
நாளை நடைபெறும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் கர்நாடக தேர்தல் குறித்து கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுக்கின்ற முடிவு தான் இறுதியாக இருக்கும்” என்று பேசினார்.
மோனிஷா
“இந்த பூச்சாண்டி எல்லாம் இங்க பலிக்காது“: அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதில்!