பூமி பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை பங்கேற்க விடாமல் திமுகவினர் தடுத்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள ராமன் தொட்டி கிராமத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க இன்று (செப்டம்பர் 11) காலை பூமி பூஜை நடைபெற்றது.
இதில் தி.மு.க. நிர்வாகியும். கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் பலர் பங்கேற்றனர்.
இதனையறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரு கட்சியினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பேரிகை – தீர்த்தம் சாலையில் அமர்ந்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷய் அணில் மற்றும் பேரிகை போலீசார் இருதரப்பினர் இடையே சுமார் 2 மணி நேரமாக சமாதான பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், கே.பி. முனுசாமியும் பூமி பூஜை நிகழ்வில் கலந்துகொண்டார்.
எனினும் மத்திய அரசு திட்ட துவக்க விழாவில் பங்கேற்க அத்தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அராஜகப் போக்கில் திமுக – எடப்பாடி
இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி பகுதியில் மத்திய அரசின் PMGSY திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில், வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணைப் பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை திமுகவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க விடாமல் அராஜகம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அரசின் திட்டங்களுக்கான துவக்க விழாவில் கலந்துகொள்வது மரபு.
ஆனால், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல், அதிகார மமதையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை அவமதிக்கும் வகையில் அராஜகப் போக்குடன் செயல்படும் திமுகவின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
PKL 11: தமிழ் தலைவாஸ் கேப்டன் யார்? அட்டவணை என்ன?
இரவில் குடிபோதையில் சிறார்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்!