பூத் கமிட்டி முகவர்கள், அடிநாதமாக செயல்பட வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழு, காணொலிக் காட்சி மூலம் கூடியது. இதில் திமுக மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் காணொலி மூலம் கலந்துகொண்டனர்.
இந்த காணொலி கூட்டம், உலக அளவில் திமுகவுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அத்துடன், அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற 2வது கூட்டமாகவும் அந்த காணொலிக் காட்சி சாதனை படைத்தது.
அந்த அனுபவத்தைப் பெற்ற திமுக, இன்று (நவம்பர் 12) தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தியது.

இதில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பூத் கமிட்டியைப் பொறுத்தவரை நீங்கள்தான் அதன் ஒருங்கிணைப்பாளர். உங்கள் பூத் உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. பூத் கமிட்டி குழு என்பது தேர்தலுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து கழகத்துக்காக செயலாற்ற வேண்டும். எப்போதும் மக்களுடன் இருப்பவர்கள் நாம். அந்த வகையில், பூத் கமிட்டி என்பது கழகத்தின் அடிப்படையில், அடித்தளமாக, அடிநாதமாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
பூத் கமிட்டியில் உள்ள ஒவ்வொருவரும் 25 வீடுகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுத் தர வேண்டும். அவர்களை நம் கழகத்தின் ஆதரவாளராக மாற்ற வேண்டும். தேர்தலில் வாக்குகள் குறைந்தாலும் உங்களைத்தான் கேட்பேன். அதிகரித்தாலும் உங்களைத்தான் பாராட்டுவேன். வாக்குச்சாவடி முகவர்கள் திறம்பட செயல்பட தேவையான உதவிகளும், சலுகைகளும் அனைத்து மட்டத்திலும் கிடைப்பதற்கான வழிவகைகளை அந்தந்த ஒன்றிய, நகர, மாவட்டச் செயலாளர்கள் செய்துகொடுப்பர்” என்றார்.
இதன்மூலம் அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இப்போதே திமுக தயாராகிவிட்டது.
ஜெ.பிரகாஷ்
மகாராஷ்டிரா: ஏக்நாத் அணிக்கு தாவிய உத்தவ் ஆதரவு எம்.பி.!
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின்… எடப்பாடி… ஓடும் காரில் மோடி நடத்திய மீட்டிங்!