தாம், திமுக தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து சொன்ன கூட்டணி மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஸ்டாலின்
சென்னை அமைந்தகரையில் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்ற திமுகவின் 15வது பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து கூட்டணி மற்றும் பிற தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தனர்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி,
“வரும் நாடாளுமன்ற தேர்தலில் எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும், திமுக தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனப் பேசியிருந்தார்.
இது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் சலசலப்பை உண்டாக்கியது. இருந்தாலும், ”ஐ.பெரியசாமி பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்று அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
பொதுக்குழு நிறைவுற்றது தொடர்பாக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இன்று (அக்டோபர் 10) எழுதியுள்ள கடிதத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த மடலில், “தோழமைக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் என் மீது அன்புகொண்ட சான்றோர்கள் பலரும் அலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து வாழ்த்துகளை வழங்கியபடி இருந்தனர்.
தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா (கி.வீரமணி), தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, எந்நாளும் திராவிட முழக்கமிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ,
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான மருத்துவர் இராமதாசு, புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கொள்கைத் தோழமைமிக்க சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் சகோதரர் வேல்முருகன் எம்.எல்.ஏ.,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கலைஞானி கமல்ஹாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை வழங்கியுள்ளனர்.
ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை ஆகியோர் தங்கள் அன்பான வாழ்த்துகளை அலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர்.
இந்த வாழ்த்துகள் எனக்கு மட்டுமானதல்ல. கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமக்கின்ற என்னைத் தாங்கி நிற்கும் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான வாழ்த்துகள்.
அந்த வாழ்த்துச் செய்திகளின் அடிநாதமாக இருப்பது, கழகத்தின்மீது தமிழ்நாடு வைத்துள்ள நம்பிக்கையும் இந்திய அளவிலான எதிர்பார்ப்பும்தான்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கள்ளசந்தை மது விற்பனை: மாணவர்கள் போராட்டம்!
முறைகேடாக பட்டம்: சென்னை பல்கலை ஊழியர்கள் சஸ்பெண்ட்!