திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றி தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 9) சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கன்வென்ஷன் செண்டரில் காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
இதில் திமுகவின் தலைவராகப் போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதனால் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ”திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாவது முறை, மு.க. ஸ்டாலின் அவர்களைப் பொதுக்குழு மூலமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
திமுகவின் தலைவராகக் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று வளர்த்த இயக்கத்தை அவரது மறைவிற்குப் பிறகு சிந்தாமல், சிதறாமல் கட்டுக் கோப்புடன் கம்பீரமாக வழிநடத்தி வரும் மு.க. ஸ்டாலின் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர், போற்றுதலுக்குரியவர்” என்று கூறியுள்ளார்.
முத்தரசன்
தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “பன்முகத் திறனை வளர்த்து, நாடு எதிர்நோக்கும் தலைவராக உயர்ந்துள்ள மு.க.ஸ்டாலின், வகுப்புவாதம், மதவெறி, சாதிவெறி, சனாதன பழமைவாத சக்திகளிடமிருந்தும்,
பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகளின் நிதிமூலதன ஆக்டோபஸ் கரங்களிலிருந்தும் இந்திய ஒன்றியத்தை மீட்டுப் பாதுகாக்க, மதச் சார்பற்ற, சமூகநீதி சார்ந்த ஜனநாயக மாற்றத்தைக் கட்டமைத்து, வெற்றி காண விழைந்து,
இரண்டாவது முறையாக திமுக தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
திருமாவளவன்
விசிக கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ”இரண்டாவது முறையாக திமுகவின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “திமுகவின் தலைவராக மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், தந்தையைப் போலக் கட்சியைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணி சிறக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வழி நின்று திராவிட இயக்கத்தைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சளைக்காமல் உழைத்து வரும் மு.க. ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் போன்ற நேரிய வழியில் தமிழ்ச் சமூகத்தை இன்னும் வீரியமாக வழிநடத்த, சமூகநீதி வரலாற்றில் மேலும் பல மைல்கற்களைப் பதிக்க, சமயச் சிறுபான்மைச் சமுதாயங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் காத்திட, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவர்களின் மக்கள் பணியில் தோளோடு தோள் நிற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்” என்று வாழ்த்தியுள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “இரண்டாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க. ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
நாராயணசாமி
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ”இரண்டாவது முறையாக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மகிழ்ந்துள்ளேன். அவரது தலைமையில் திமுக வலுப்பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
திமுக பொதுக்குழுவில் தீர்மானங்களே இல்லையே… ஏன்?
பத்திரிக்கையாளர் டு துணை பொதுச்செயலாளர் : கனிமொழின் கரடு முரடு பயணம்!