ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்துக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்தும் முனைப்பில் மத்திய பாஜக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அது தொடர்பான பரிந்துரைகளை கேட்டு சட்ட ஆணையத்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி இருந்தது. இதனையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதிக்குள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சட்ட ஆணையம் அண்மையில் கடிதம் அனுப்பியது.
பழனிசாமி – பன்னீர் ஆதரவு
அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தரப்பு ஏற்கனவே ஆதரவு தெரிவித்தது. இந்த திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே ஆதரவு தெரிவித்தார் என்ற ஓ.பன்னீர்செல்வம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
திமுக எதிர்ப்பு
எனினும் இதற்கு ஆரம்பத்தில் இருந்து திமுக தனது கடும் எதிர்ப்பினை பல்வேறு சமயங்களில் வெளிபடுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதனை டெல்லியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி. வில்சன் சட்ட ஆணையத்திடம் வழங்கினார்.
ரிமோட் வாக்குப்பதிவு : நீட்டிப்பு
மேலும் அதே கூட்டத்தில் தொலைதூர வாக்குப்பதிவு எனப்படும் ரிமோட் வாக்குப்பதிவுக்கும் ஒப்புதல் கேட்டபோது திமுக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இது தொடர்பாக தங்களது கருத்துகளை கூற ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் வழங்கிய நிலையில், அந்த கால அவகாசம் தற்போது பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களை வழங்கக் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜல்லிக்கட்டில் அடுத்தடுத்து உயிரிழப்பு : முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
”சூப்பர்ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் தான்” – சரத்குமார் ஆவேசம்