தமிழ்நாட்டு அரசியல் வானம் தி.மு.க! மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் தமிழ்நாட்டுக்கு வந்தார்.  திருநெல்வேலியில் பேசும்போது அவர் பிரதமர் என்பதை மறந்து தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க என்ற கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என்று சூளுரைத்தார்.

தேர்தல் என்று வந்தால் இப்படியான சவால் பேச்சுக்களெல்லாம் இயல்புதானே என்று நினைக்கலாம். தொண்டர்களை உற்சாகப்படுத்த இப்படிப் பேசுவது வழக்கம்தானே என்றும் சிலர் கூறலாம். ஆனால், ஒரு பிரதமரே இப்படிப் பேசுவதை எளிதில் புறக்கணிக்க முடியாது.

இதற்கு முன்னரே பாஜக தலைவர்கள் “கழகங்கள் இல்லா தமிழகம்” என்று பேசியுள்ளார்கள். “காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்று பேசியுள்ளார்கள். இந்தியில் ‘முக்த்’ என்பார்கள். முக்தி அடைந்துவிடும் அல்லது அழிந்துவிடும் என்று பொருள். “காங்கிரஸ் முக்த் பாரத்” என்பார்கள். அதாவது, எதிர்க்கட்சியின் இருப்பையே சகிக்க முடியாத தன்மையை வெளிப்படுத்துவார்கள்.

பாஜக-வை பாசிசத்தன்மை கொண்ட கட்சி என்று கூறும்போது சிலர் அதை மிகைக் கூற்றாக, தேய் வழக்காக நினைக்கிறார்கள். ஆனால், ஒரே அடையாளத்தின் மீது தேசத்தைக் கட்டமைக்க வேண்டும்; அந்த அடையாளத்தை ஏற்காதவர்கள் தேசத்திற்கு அந்நியர்கள் என்ற எண்ணம் பாஜக-வின் அடிநாதமான சிந்தனை என்பதை மறந்துவிட முடியாது.

அது என்ன ஒற்றை அடையாளம்? அதுதான் “இந்து, இந்தி, இந்தியா” என்ற சூத்திரம். அதற்கு அடிப்படை ஆரிய சமஸ்கிருத கலாச்சாரம். இந்திய தேசியம் உருவானபோதுதான், மக்கள் பேசிய இந்துஸ்தானி மொழியை சமஸ்கிருதமயமாக்கி நவீன இந்தியை உருவாக்கினார்கள். ஆரியர்களின் வேதங்களே இந்தியப் பண்பாட்டின் ஒற்றை மூலவேர் என்ற சித்திரத்தைக் கட்டமைத்தார்கள். இந்த இரண்டு அடையாளங்களுமே இந்தியா என்ற தேசம் என்று கருதினார்கள்.

காந்தி, நேரு உள்ளிட்ட வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களும் ஆரிய பண்பாட்டினை மதித்தாலும், இந்தியாவுக்குப் பல்வேறு பண்பாட்டு மூலங்கள் உண்டு என்பதை ஏற்றார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கோட்பாடாக்கினார்கள். ஒற்றை அடையாளத்தை தேசத்தின் மையமாக வைத்து பிற அடையாளங்களைப் புறமொதுக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், இந்து மகா சபை சாவர்க்கரும், ஆர்.எஸ்.எஸ் கோல்வால்கரும் அப்படி ஆரிய, சமஸ்கிருத, இந்தி, இந்து, இந்தியாவையே தேசத்தின் ஒற்றை பண்பாட்டு மூலமாக நினைத்தார்கள்.                    

அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வளர்ந்த பிரதமர் மோடி, தி.மு.க காணாமல் போகும் என்று சொல்வதை வெறும் தேர்தல் நேர பேச்சாகக் கருத முடியாது. திராவிடம் என்ற மாற்றுப் பண்பாட்டை இந்தியாவில் இருக்க சகிக்காத ஒற்றை அடையாள சித்தாந்தத்தின் குரலாகத்தான் அதைப் பார்க்க முடியும்.
DMK Political Situation in Tamilnadu
தி.மு.க என்னும் திராவிட அரசியல் வானம்

ஆரிய ஒற்றை பண்பாட்டு அடையாளத்தினை மறுத்து தென்னிந்தியாவில் உருவானதுதான் திராவிட சித்தாந்தம். பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே திராவிட தமிழ் அடையாளத்தின் புத்தெழுச்சி தொடங்கியது. இராமலிங்க அடிகள், மனோன்மணீயம் சுந்தரனார், பண்டித அயோத்திதாசர் என வரிசையாகப் பல பெரியோர்கள் ஆரிய பிராமண பண்பாட்டு கூறுகளை விலக்கி திராவிட தமிழ் அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்பவர்களாக உருவானார்கள்.

பார்ப்பனர்களின் சமூக, அரசியல் மேலாதிக்கத்தை எதிர்கொள்ளும் நவீன அரசியல் அமைப்பாக, குடிமைச் சமூக அமைப்பாக நீதிக்கட்சி உருவானது. அகில இந்தியாவிலும் ஒரு மாற்றுக் குரலாக விளங்கிய அது, 1920ஆம் மெட்ராஸ் பிரெசிடென்சியில் இரட்டையாட்சி முறையில் ஆட்சிக்கு வந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற இட ஒதுக்கீட்டு முறைக்கு கால்கோள் இட்டது.

காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பகுத்தறிவுப் பகலவன் பெரியார், காங்கிரஸ் வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்காததால் வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். சூறாவளியாக தமிழ் மக்களிடையே ஊடுருவி ஆரிய ஜாதீய பண்பாட்டினை தகர்த்தெறியும் முனைப்பினை உருவாக்கினார்.
 
இந்தி மொழியை தமிழர்கள் மேல் திணிக்கும் முயற்சியை காலனீய கால காங்கிரஸ் சர்க்கார் 1937ஆம் ஆண்டு மேற்கொண்டபோது பெரும் கிளர்ச்சியை தொடங்கினார். அது திராவிட நாடு கோரிக்கையாக வடிவம் கொண்டது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில்தான் இந்திய குடியரசு உருவானபோதே திராவிட முன்னேற்றக் கழகமும் உதயமானது. சுதந்திர இந்திய குடியரசு, வயது வந்தோருக்கெல்லாம் வாக்குரிமை என்ற மக்களாட்சித் தேர்தல் நடைமுறையை நோக்கிச் சென்றது. அதை எதிர்கொள்ள தி.மு.க மக்களிடையே வலுவான ஓர் அமைப்பினை உருவாக்க முனைந்தது. ஒவ்வோர் ஊரிலும் கிளைகளை அமைத்தது, மன்றங்களை அமைத்தது. எளிய, சாமானிய மக்களுக்கு அரசியல் பயிற்சி அளித்தது.

உண்மையில் திராவிட முன்னேற்றக் கழகம் மிக வலுவான அடித்தளத்திலேயே அந்த செயல்பாட்டை மேற்கொண்டது.

முதலாவது, கீழடி ஆய்வுகள் சுட்டும் பன்னெடுங்காலத்து பண்பாட்டுச் செறிவு. திருக்குறளும், அகநானூறும், புறநானூறும், சிலப்பதிகாரமும், கொடுத்த மகத்தான பண்பாட்டு அடித்தளம்.

இரண்டாவது, வள்ளலார் முதல் பெரியார் வரை உருவாக்கிய சமூக புத்தாக்க நோக்கு; ஆரிய, பார்ப்பனீய பண்பாட்டு மறுப்பு. இந்தியா என்ற தேசக் கட்டமைப்பில் இருந்தாலும், திராவிட தமிழ் மக்களின் பண்பாட்டு தனித்துவத்தை வலியுறுத்தும் சுயமரியாதை, சுயாட்சி நோக்கு.

இந்த வலுவான அடித்தளங்களின் மேல் அரும்பாடுபட்டு அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவர் தம்பிகளும் உருவாக்கிய மகத்தான மாளிகைதான் திராவிட முன்னேற்றக் கழகம். பதினெட்டு ஆண்டுகளில் எந்த டாடா, பிர்லா, அம்பானி, அதானி ஆதரவும் இன்றி சாமானிய மக்களை அமைப்பாக்கி ஆட்சியில் அமர்ந்த மகத்தான மக்களாட்சி இயக்கம் தி.மு.க.

உண்மையில் உலகின் வேறெந்த நாட்டிலாவது இப்படி ஓர் இயக்கம் அடித்தள மக்களிடையே வேரூன்றி வளர்ந்து ஒரு மாநிலத்தின் மக்களின் அடையாளமாக, அவர்களது வரலாற்றைச் சமைக்கும் அரசியல் வானமாக விரிவுகொண்டிருக்குமா என்பது பரிசீலனைக்குரியது.

DMK Political Situation in Tamilnadu

மேகங்கள் கலையலாம், வானம் மறையுமா?    

மேற்சொன்ன வரலாற்றை சரியாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் புரியும். ஏன் பிற அரசியல் கட்சிகளெல்லாம் தமிழ்நாட்டில் மேகங்கள் போலிருக்க தி.மு.க வானமாக இருக்கிறது என்று.

அது இந்திய குடியரசோடு உடன் தோன்றி, அடித்தள மக்களின் அமைப்பாக திராவிட தமிழ் மக்களை தன்னுணர்வு கொண்ட அரசியல் சமூகமாகக் கட்டமைத்து என்ற வரலாற்று உண்மைதான் காரணம். அது எப்படி நடந்தது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய ஒன்றிய அரசின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மொழியை மாற்ற வேண்டும், ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் வட நாட்டு தலைவர்களிடையே கோலோச்சியது. அதை எப்படியாவது திராவிட தமிழ் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என நினைத்தார்கள்.

அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டபோது பதினைந்து ஆண்டுக்காலம் ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடரலாம் என்று எழுதி வைத்தார்கள். அதன்பின் ஒன்றிய ஆட்சி இந்தி மொழியில்தான் நடக்கும் என்றால் தமிழ்நாடு எப்படி அந்த ஒன்றியத்தில் பங்கெடுக்க முடியும் என்பதை வட நாட்டவர் கருதிப் பார்க்கவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆங்கிலம் ஒன்றிய அரசின் இரண்டாவது ஆட்சி மொழியாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களுடனான தொடர்பு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வந்தது. நவீன இந்திய சிற்பி பண்டிதர் நேருவிடம் அனைத்து மாநிலங்களும் ஏற்கும் வரை ஆங்கிலம் தொடரும் என வாக்குறுதியைப் பெற்றது.

நேரு மறைந்தவுடன், அவர் கொடுத்த வாக்குறுதியும் மறையுமோ, பதினைந்து ஆண்டு கெடு 1965ஆம் முடிந்தவுடன் இந்தி ஆதிக்கம் நிலைபெறுமோ என்ற ஐயுற வேண்டிய சூழ்நிலை உருவானது. அதற்கு முக்கிய காரணம் இன்றைய பா.ஜ.க-வின் முந்தைய வடிவமான ஜன சங்கம் ஒன்றிய அரசுக்குக் கொடுத்த அழுத்தமும், நட த்திய கிளர்ச்சிகளும் என்றால் மிகையாகாது.

 அந்த சூழ்நிலையில்தான் கீழப்பழுவூர் சின்னசாமி என்ற தி.மு.க தொண்டர் தன்னுடலை தீக்கிரையாக்கி இன்னுயிரை தமிழைக் காக்க ஈந்தார். “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற முழக்கம் பரவியது. அதற்கு அடுத்த ஆண்டு மாணவர்கள் பெரும் எழுச்சியினை தோற்றுவித்தார்கள். தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டது. மொழிப்போர் ஈகையர் பட்டியல் நீண்டது.

இறுதியில் ஒன்றிய அரசு பணிந்தது. அனைத்து மாநிலங்களும் ஒப்பும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாக, தொடர்பு மொழியாகத் தொடரும் என்பது உறுதியானது. அண்ணா தமிழ்நாட்டு பள்ளிகளில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என சட்டமியற்றினார். ஆங்கிலமும், தமிழுமே பயிற்றுவிக்கப்படும், மூன்றாவது மொழி என்ற கூடுதல் சுமை ஏற்றப்படாது என்ற நிலை ஏற்பட்டது.  

தொடர்ந்து இட ஒதுக்கீடு என்ற சமூக நீதிக்கொள்கைக்காகவும், மொழியுரிமை என்ற மக்கள் உரிமைக்காகவும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பண்பாட்டு மூலாதாரத்தில் முகிழ்ந்த மக்கள் நல ஆட்சியினாலும்தான் திராவிட மாடல் என்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை சாதித்துக் காட்டியது, கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சி.

 எழுபத்தைந்தாண்டு அரசியல் காட்டுவதென்ன?

இந்தியாவிலேயே திராவிடம் என்றும், பார்ப்பனரல்லாதோர் அரசியல் என்றும் ஆரிய மாயைக்கு எதிரான அரசியலை கட்டமைத்த இயக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா சனாதனம்?

தி.மு.க தொடங்கிய காலம் முதலே ஊடகங்கள் அதற்கு எதிராக அணிதிரண்டு நின்றன. தி.மு.க அதைத் தன்னுடைய மொழியாற்றலால் முறியடித்து தனக்கேயுரிய ஊடக வெளியினை உருவாக்கியது.

அண்ணா மறைந்து கலைஞர் முதல்வரான பிறகு நடந்த தேர்தலிலே, தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று நெடுநாள் அரசியல் எதிரிகளான ராஜாஜியும், காமராஜரும், ஜன சங்கத்துடன் கரம் கோர்த்தார்கள். பெரியார் ராமர் முதலிய தெய்வங்களை அவமதித்தார் என்று பிரச்சாரம் செய்தார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளென ஊதிப்பெருக்கினார்கள்.

அந்தத் தேர்தலிலே சோஷலிஸப் பாதையைத் தேர்ந்தெடுத்த இந்திரா காந்தி அவர்களுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க மகத்தான வெற்றியை ஈட்டியது. அதைக் கண்டு வெருண்டவர்கள் தி.மு.க-வைப் பிளக்க வகை செய்தார்கள்.

ஆனால், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட அரசியல் வானத்தின் கீழ் தி.மு.க-வின் மாற்றுக் கட்சியானதே தவிர, அவர்களால் அந்த வானத்தை அகற்ற முடியவில்லை. தி.மு.க தொடர்ந்து அரசியல் களத்தில் நின்றதுடன், தமிழ்நாட்டு அரசியலின் திசைகாட்டியாகவும் கலைஞர் தலைமையில் வீறு நடை போட்டது.

தொடர்ந்து எத்தனையோ சோதனைகள், பொய் பிரச்சாரங்கள். ஈழப் போராளிகள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று 1990ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியைக் கலைத்தார்கள். அதன்பின் நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் தி.மு.க அடைந்த தோல்வியை வைத்து அதை அரசியலிலிருந்து அப்புறப்படுத்தத் துடித்தார்கள்.  

தி.மு.க ஒன்றிய அரசில் பங்கேற்ற ஐக்கிய முன்னணி அரசை ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காரணம் காட்டி, தி.மு.க மீது அபாண்டமான ஐயங்களைக் கூறி கலைத்தார்கள். தி.மு.க-வைத் தனிமைப்படுத்த துடித்தார்கள்.

எத்தனையோ முயற்சிகள் செய்தும் ஆரிய சக்திகளால், மதியூகிகளால், சூழ்ச்சி வலைப்பின்னல்களால் தி.மு.க என்ற அரசியல் வானத்தினை மறைத்திட முடியவில்லை. உதயசூரியனின் பயணத்தைத் தடுத்திட முடியவில்லை.

இப்போது ஆரிய மாயையின் புது முகமூடியாக வந்திருக்கும் நரேந்திர மோடியால் மட்டும் அந்த வானத்தை தகர்த்துவிட முடியுமா என்ன? திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்த தலைமுறையினை, இளைஞர் படையினை வரலாற்றுப் பயணத்தைத் தொடர்வதற்கு உருவாக்கி விட்டது.

அதனைக் கண்டு பொறுக்காமல்தான் வாரிசு அரசியல் என்று மாய்மாலம் செய்கிறார்கள். கொள்கைக்கும், பண்பாட்டுக்கும் வாரிசுகள் தோன்றத்தான் செய்வார்கள்.

மறைந்து  ஐம்பதாண்டுக் காலம் கழித்து பெரியார் மீண்டும் புத்துயிர் பெறுகிறார். அவரைக் குறித்த நூல்கள் பெருகுகின்றன. கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்று பாடுகிறார்.

அண்ணா. பெரியார், கலைஞர் என்ற திராவிட இயக்கத்தின் பேராளுமைகள் இளைய தலைமுறையின் இதயங்களில், சிந்தனைகளில் நிறைகிறார்கள்.

எத்தனையோ தேர்தல்கள் வரலாம். வெற்றி தோல்விகள் வரலாம். கட்சிகள் பல உருவாகிக் கலையலாம். அவையெல்லாம் மேகங்கள் போல. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற வானம் மறையாது.

ஏனெனில் அதனை நிறைத்திருப்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான ஒரு பண்பாட்டின் ஒளி. அதுவே திராவிட தமிழ்ப் பண்பாடு. அதனை அழிக்க ஆரியம் எவ்வளவு முயன்றாலும் அது நடக்காது.

கட்டுரையாளர் குறிப்பு:

DMK Political Situation in Tamilnadu by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அ.இ.அ.தி.மு.க தேர்தல் முழக்கமும், அரசியல் குழப்பமும்

கார்ப்பரேட் நல ஆட்சியும், விவசாயிகள் போராட்டமும்: இந்திய மக்களாட்சியின் முரண்கள்!

மாநிலங்களின் உரிமைக் குரல்: தேசம், வளர்ச்சி, கூட்டாட்சி

கதாநாயக நடிகர்கள்: ஆட்சி செய்ய ஆசை! அரசியல் பேச அச்சம்!

+1
0
+1
1
+1
1
+1
15
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *