”விடியலுக்காக காத்திருக்கிறோம்” திமுகவை நெருங்குகிறாரா ராமதாஸ்?

அரசியல்

பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு ஆண்டு முடிவிலும்  கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி வருகிறது. அந்த வகையில் 2022  ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் புத்தாண்டு பொதுக்குழுவை நேற்று (டிசம்பர் 30) புதுச்சேரியில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் கூட்டினார்கள்.

அடுத்து வரும் ஆண்டுகள் நாடாளுமன்ற  பொதுத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானமும்,  டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பேச்சுகளும்  முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசியல் தீர்மானத்தில்,  “2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி 40 மக்களவைத் தொகுதிகளிலும் களப்பணிகளை விரைவுபடுத்துவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மேலும் அந்தத் தீர்மானத்தில்,  “2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராகிவிட்டது. அடுத்தக்கட்டமாக, 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களையும், கிளை நிர்வாகிகளையும் நியமிக்கும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரப்படுத்தியிருக்கிறது.

அடுத்த இரு மாதங்களில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகளை நிறைவு செய்ய பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

DMK PMK alliance forming new year general body meeting

மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் ஆன்லைன் சூதாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் மக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மக்கள் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்குரல்கள் அரசின் முடிவுகளை மாற்றியிருக்கின்றன.

2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது தான் நமது இலக்கு ஆகும்.

அந்த இலக்கை அடைவதற்காக நிறுவனர், தலைவர் ஆகியோரின் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவோம்; களப்பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது” என்பதுதான் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றியிருக்கிற அரசியல் தீர்மானம்.

DMK PMK alliance forming new year general body meeting

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, “நாம் ஆட்சியில் இல்லாமலேயே பல சாதனைகளை படைத்து வருகிறோம். டாக்டர் காலையில் அறிக்கை வெளியிட்டால் அதை உடனே நிறைவேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்.

உடனே இதை கூட்டணி கூட்டணி என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறிய அன்புமணி, “என்னிடம் சிலர்… சில அரசியல்வாதிகளை சுட்டிக் காட்டி, அவர் தினந்தோறும் மீடியாக்களை பார்க்கிறார், பேட்டி கொடுக்கிறார், அரசியல் தலைவர்களை தாக்குகிறார், நீங்கள் ஏன் அவ்வாறு செய்வதில்லை?’ என்று கேட்டார்கள்.

சிலர் அறிக்கை வெளியிடுகிறார்கள், சிலர் வாட்ச்சை காட்டுகிறார்கள். இந்த விளம்பர அரசியல் எல்லாம் நமக்குத் தேவையில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பெயர் குறிப்பிடாமல் இடித்த அன்புமணி….
“அதிமுக இப்போது நான்காக ஐந்தாக உடைந்து கிடக்கிறது. திமுக அரசு மீதான மக்களின் விமர்சனங்கள் உங்களுக்குத் தெரியும்.

மற்றவர்கள் எல்லாம் வெறும் சத்தம்தான் போட்டு வருகிறார்கள். இனி நமக்கான காலம்தான். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று இரு நாள் தங்கப் போகிறேன். டாக்டர் ராமதாஸ் ஆணையிட்டால் வரும் சித்திரை பௌர்ணமியான மே 5 ஆம் தேதி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தலாம்” என்று கைதட்டல்களுக்கு இடையே பேசி முடித்தார் அன்புமணி.

DMK PMK alliance forming new year general body meeting

நிறைவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசத் தொடங்கினார். எல்லாரும் பசியோடு இருந்த வேளையில், தான் எழுதிய அரசியல் ஆத்திச் சூடியை வாசிக்க ஆரம்பித்தார் டாக்டர். 45 வாசகங்களைக் கொண்ட அந்த அரசியல் ஆத்திச் சூடியை வெளியிட்டவர், அதை 5 நிமிடங்களில் படித்து முடித்துவிட்டார்.

”அமாவாசையும், பவுர்ணமியும் கட்சியின் செயற்குழு கூட்டத்தால் நிறையட்டும்” என்று ஆத்திச் சூடியின் முதல் வாசகமாக வைத்துள்ளார் டாக்டர் ராமதாஸ். அதாவது கிளைகள் வரை பழையபடி அமாவாசை, பௌர்ணமி கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ்,

“அனைத்து சமுதாயங்களுக்கும் உரிய இடப்பங்கீட்டை பெறுவதே நமது கொள்கை, ஆட்சியமைப்பதே இலக்கு…. அதை நோக்கியே நமது உழைப்பு, ஒவ்வொரு ஊரிலும் கட்சிக்கு பெயர்ப்பலகை திற… ஒவ்வொரு தெருவிலும் கொடி ஏற்று, ஓட்டுக்களைச் சேர்… கட்சிக்காக… காலம் கனிந்திருக்கிறது… காற்றுள்ள போதே தூற்றிக்கொள்! கோஷ்டி அரசியல் செய்யாதே… ஒன்றுபட்டு கட்சிப் பணியாற்று! நீ ஒருவன் தான்…. ஆனால், உன்னால் 1000 ஓட்டு நிச்சயம்!,

தினமும் 10 பேரிடம் பாமகவின் சாதனைகளையும், கொள்கைகளையும் சொல்; அவர்களில் குறைந்தபட்சம் ஒருவரை கட்சியில் உறுப்பினராக சேர்! பெண் குழந்தைகளை பெண் குழந்தைகள் என்று சொல்லாதீர்கள்… பெண் தெய்வங்கள் என்று சொல்லுங்கள்! வன்னியர்களின் முன்னேற்றத்திற்கான நன்மருந்து 10.5% இடஒதுக்கீடு” என்று பல்வேறு வாசகங்களைக் குறிப்பிட்டார்.

“கடைசியாக 45 ஆவது ஆத்திச் சூடி, விடியலுக்காக காத்திருக்கிறோம்… விடியலுக்கு வெகுநேரமில்லை” என்பதை மட்டும் இருமுறை சொல்லி தன் உரையை முடித்தார் டாக்டர் ராமதாஸ்.

எப்போதுமே பொதுக்குழுவில் ஏதேனும் ஒரு கட்சியை அதிரடியாக விமர்சனம் செய்வார் டாக்டர் ராமதாஸ். ஆனால் இந்த முறை அப்படியான அதிரடி விமர்சனங்கள் இல்லை. ‘காலை ராமதாஸ் அறிக்கை விட்டால் முதல்வர் ஸ்டாலின் அதை உடனே நிறைவேற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்’ என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸோ அரசியல் ஆத்திச் சூடியில் விடியலுக்காக காத்திருக்கிறோம், விடியலுக்கு வெகுநேரமில்லை என்று பேசி முடித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்து அரசியல் ரீதியாக விடியல் என்றால் திமுகவை குறிக்கிறது. விடியல் தரப் போகிறோம் என்று பிரச்சாரம் செய்து ஸ்டாலின் ஆட்சியைப் பிடித்தார். இன்றுவரை அதிமுகவினர் ஸ்டாலின் அரசை விடியா அரசு என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் விடியலுக்காக காத்திருக்கிறோம் என்று ராமதாஸ் சொன்னது பாமகவுக்கான அரசியல் விடியலையா அல்லது திமுகவுடனான கூட்டணியையா என்று பொதுக்குழு முடிந்து விருந்து சாப்பிடும்போது பாமக நிர்வாகிகள் பேசிக் கொண்டனர்.

ஆரா

ரொனால்டோவை தட்டித் தூக்கிய சவுதி அரேபியா: எவ்வளவு கோடி தெரியுமா?

ரூ.1500 கோடியை தொட்ட திருப்பதி உண்டியல்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.