“எடப்பாடியின் பிரச்சாரத்தைத் தடுக்க ரூ.1000” : திமுக மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!

அரசியல்

ஈரோடு கிழக்குத் தொகுதி திமுகவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

வருகிற 27ஆம் தேதி ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஒட்டுமொத்த அமைச்சர்களும் ஈரோட்டில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15) சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய சி.வி.சண்முகம், “மோசடியான வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலிலிருந்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வேண்டியவர்கள்.

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் நாங்கள் ஆதாரப்பூர்வமாகப் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் தேர்தல் பிரிவாகச் செயல்பட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தேர்தலுக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இரண்டு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த தொகுதி முழுவதும் திமுக கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அனைத்து கட்சிகளுக்கும் வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. அந்த ஜனநாயகம் இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியான எங்களை வாக்காளர்களை சந்திக்க விடுவதில்லை.

ஒவ்வொரு பூத்துக்கும் வாக்காளர்களை அழைத்து சென்று மூன்று வேளை உணவு கொடுத்து, ரூ.1000 பணம் கொடுத்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.

திமுகவுடன் சேர்ந்து காவல்துறை அராஜகத்தில் ஈடுபடுகிறது. சோதனை என்ற பெயரில் அதிமுகவினருக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றனர். இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இங்கு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். இதனால் அதிமுக கூட்டத்தை கூட்ட கூடாது என்பதற்காக காவல்துறை அத்துமீறி நடந்துகொண்டிருக்கிறது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

1000 ரூபாய் கொடுத்து அடைக்கப்பட்டிருக்கும் வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைத்து இடத்திலும் திமுக கொட்டா போட்டிருக்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தைத் தடுக்க இதுபோன்று செய்கிறார்கள்” என்றார்.

பிரியா

கங்குலிக்கு கோலியை பிடிக்காது: சேத்தன் சர்மா பற்ற வைத்த நெருப்பு!

யார் தடுத்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.