கோவையில் திமுக பாஜக போஸ்டர் யுத்தம்… குவிந்த போலீஸ்!

அரசியல்

கோவையில் மேம்பால தூண்களில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை நேற்று இரவு பாஜகவினர் கிழித்து அகற்றினர். இந்நிலையில் அங்கு ஒன்று திரண்ட திமுகவினர் அதே இடத்தில் மீண்டும் புதிய சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் கோவைக்கு வருவதாக இருந்தார் . அவரை வரவேற்கும் விதமாக திமுக சார்பில் அவிநாசி சாலையில் அரசின் சாதனை விளக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் முதல்வருக்கு ஏற்பட்ட கொரோனோ தொற்று பாதிப்பு காரணமாக கோவை பயணம் ரத்து செய்யப்பட்டது.

அகற்றப்படாத திமுக போஸ்டர்

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற வேண்டுமென கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் அதன் பின்னரும் அவிநாசி சாலையில் உள்ள மேம்பால தூண்களில் திமுகவின் சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜகவினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து திமுகவின் சுவரொட்டிகளை அகற்றகோரி மனு அளித்தனர். அதன்படி மாவட்ட ஆட்சியரும் 10 நாட்களுக்குள் அவிநாசி சாலையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுமாறு திமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

போஸ்டர் கிழிப்பு!

இந்நிலையில் நேற்று இரவு திடீரென கொடிசியா வளாகம் முன்பு திமுக சுவரொட்டிகளை அகற்றக்கோரி 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையிலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய திமுக சுவரொட்டிகளை பா.ஜ.கவினர் கிழித்து எறிந்தனர். அப்போது, பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பாஜகவினர் கைது!

அதேவேளையில் அங்கு திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியனர். இந்நிலையில் காவலர்களின் எதிர்ப்பையும் மீறி சுவரொட்டிகளை கிழித்த பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வரும் 16 ஆம் தேதிக்குள் அமைதி குழு கூட்டம் நடத்த வேண்டும் எனவும், அதில் பேனர்கள் ஒட்டுவது தொடர்பாக ஒரு நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் பாஜகவினர் கோரிக்கை வைத்து கலைந்து சென்றனர்.

அதே இடத்தில் புதிய போஸ்டர்!

இதற்கிடையே அங்கிருந்த திமுகவினர், தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புதிய சுவரொட்டியை அதே இடத்தில் மீண்டும் இன்று அதிகாலை ஒட்டியுள்ளனர். விடிய விடிய நடைபெற்ற இந்த சம்பவத்தால் கோவையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கட்சியினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
2

1 thought on “கோவையில் திமுக பாஜக போஸ்டர் யுத்தம்… குவிந்த போலீஸ்!

  1. ஏதோ ஒரு வழியில் கலவரத்தை உண்டாக்கி மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்ப பாசிச பிஜேபி செய்யும் வேலை மக்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டிய வேலையை இவனுங்க ஏன் ஆர்ப்பரிக்கணும்? இல்ல கோர்ட்டில் வழக்கு போடு… இதை செய்ய மாட்டான் பொய்யை பரப்பி தான் புனிதராக காட்டிக்கொள்வான். பிஜேபி யை ஜெயா பாணியில் கையாள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *