திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்ட ஆவுடையப்பனுக்கும், அவருக்கு எதிராக போட்டியிட்டவரான சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவாளர் தங்கபாண்டியனுக்கும் இடையே திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேற்று (செப்டம்பர் 23) அறிவாலயத்தில் பஞ்சாயத்து பேசி முடித்து வைத்திருக்கிறார்.
திமுகவின் உட்கட்சித் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்… நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் செப்டம்பர் 22 ஆம் தேதி அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார். அன்றே அவருக்கு போட்டியாக சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவாளரான பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளரும் ஒன்றிய சேர்மனுமான தங்கபாண்டியனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் நெல்லை திமுக மட்டுமல்லாமல் தமிழகம் முழுதுவதுமே திமுகவினர் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு சபாநாயகர் அப்பாவு தன்னுடைய அரசு இல்லமான குறிஞ்சி இல்லத்துக்கு தங்கபாண்டியன் உள்ளிட்ட ஆதரவாளர்களை அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தார். இதனால் ஆவுடையப்பனுக்கு அதிர்ச்சி அதிகமானது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் அறிவாலயம் சென்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் கண் கலங்கி அழுது தன்னுடைய மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைக்க முயற்சி எடுத்தார் ஆவுடையப்பன்.
அதேநேரம் அப்பாவு இப்படி நேரடியாக களமிறங்கி தன்னுடைய ஆதரவாளரை அனுப்பியதால் மீண்டும் தன்னை மாற்றும் முடிவை மேற்கொள்ளப் போகிறார்களோ என்று கருதிவிட்டார் ஆவுடையப்பன். இதனால் மீண்டும் தலைமைக் கழக நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, ‘எனக்கு எதிராக எப்படிங்க அந்த பையன் மனு தாக்கல் செய்யலாம்? அப்படின்னா தேர்தல் வைக்கப் போறீங்களா?’ என்று கேட்டிருக்கிறார்.
இந்த நிலையில் தகவல் திமுக தலைவர் ஸ்டாலின் வரைக்கும் போய் நேற்று (செப்டம்பர் 23) முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவிடம் சொல்லி ஆவுடையப்பன், தங்கபாண்டியன் இருவரையும் அழைத்துப் பேசி பிரச்சினையை முடிக்கச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அதன்படி பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆவுடையப்பனையும், தங்கப்பாண்டியனையும் அறிவாலயத்துக்கு அழைத்தார் கே.என்.நேரு. அவரோடு துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை இருந்திருக்கிறார்.
ஆவுடையப்பனை தாஜா செய்த நேரு
முதலில் ஆவுடையப்பனை மட்டும் தனது அறைக்கு அழைத்துள்ளார் நேரு. முன்னாள் சபாநாயகரும் தற்போதைய மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் வந்ததும் அவருக்கு வணக்கம் சொல்லி அமர வைத்துள்ளார் நேரு,
”அண்ணாச்சி… தலைவர் உங்களுக்கு பெரிய மனசு பண்ணி இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்காரு. உங்க மாவட்டத்துல இருக்குற 14 ஒன்றியத்துல 6, 7 பேர் உங்களை எதிர்க்குறாங்க. அதுல ரெண்டு பேர் ஒன்றிய சேர்மன், ஒருத்தர் மாவட்ட ஊராட்சித் தலைவர். கிட்டத்தட்ட ராதாபுரம், நாங்குநேரினு ரெண்டு சட்டமன்றத் தொகுதியில இருக்குற முக்காவாசி நிர்வாகிங்க உங்களை எதிர்க்குறாங்க. நம்ம அரசு திட்டங்களை அரசு வழியாதானே நாம மக்களுக்குக் கொண்டு போகணும். நீங்க அவங்களையும், அவங்க உங்களையும் எதிர்த்தாங்கண்ணா எப்படி வர்ற தேர்தலை நாம ஃபேஸ் பண்ண முடியும் அண்ணாச்சி? அதனால அட்ஜெஸ்ட் பண்ணி போங்க. நீங்க சீனியரு, உங்களுக்கு நாங்கள்லாம் சொல்ல வேண்டிய தேவையில்லை” என்று நேரு சொல்ல,
“என்ன இப்படி பேசி என்னை அசிங்கப்படுத்துறீங்க. நான் எல்லாரையும் அரவணைச்சுதான் போறேன்” என்றிருக்கிறார் ஆவுடையப்பன்.
“அப்படி இருந்தா எப்படி அண்ணாச்சி மூணு ஒன்றிய சேர்மன், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் உங்களுக்கு எதிரா நிக்கிறாங்க. எல்லா சாதியிலயும்ல உங்களை எதிர்க்குறாங்க? இனிமே இப்படி நடக்காம எல்லாரையும் அனுசரிச்சு போங்க. அவங்களுக்கு ஏதாவது பதவி வேணும்னா கொடுத்துவிடுங்க” என்றிருக்கிறார் நேரு.
அதற்கு ஆவுடையப்பன், “இல்லங்க. என் பேனல்ல யாரையும் மாத்த விடமாட்டேன். தலைவரும் என்னைதான் இருங்கனு சொல்லியிருக்காரு” என்று அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.
கடைசி வாய்ப்பு!
அப்போது நேரு, ‘ஆமா அண்ணாச்சி. தலைவர்தான் சொன்னாரு. இதுதான் கடைசி வாய்ப்புனும் சொல்லச் சொன்னாரு. கட்சிக்காரங்களை, நம்ம கட்சியில இருக்கிற உள்ளாட்சித் தலைவர்களை அனுசரிச்சு மக்களுக்கு நல்லது செஞ்சு கட்சியை ஜெயிக்க வைக்கற வேலைய பாருங்க அண்ணாச்சி. வேறொண்ணுமில்ல போயிட்டு வாங்க” என்று பத்து நிமிடத்தில் ஆவுடையப்பனை அனுப்பி வைத்துவிட்டார் கே.என். நேரு.
அப்பாவு ஆதரவாளர் தங்கபாண்டியனை அழைத்த நேரு
அடுத்த சில நிமிடங்களில் சபாநாயகர் அப்பாவுவின் ஆதரவு பெற்ற பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மனும் ஆவுடையப்பனுக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவருமான தங்கபாண்டியனை உள்ளே அழைத்தார் கே.என். நேரு.
“ஏம்ப்பா… 2020 ல உங்க மாவட்டத்தை பிரிக்கிறது பத்தி பஞ்சாயத்து பேச தலைவர் என்னை அனுப்பி வச்சாரு ஞாபகம் இருக்கா. அப்போ என் வண்டிய மறிச்சி மாவட்டச் செயலாளர் அண்ணாச்சி ஆவுடையப்பனை மாத்தாதீங்கனு பேசினீங்க. இன்னிக்கு என்னடான்னா அவரை மாத்துங்கனு சொல்லி அவருக்கு எதிராகவே போட்டி போடுறீங்க… என்னா ஆச்சி உங்களுக்கு?” என்று கேட்டார்.
அதற்கு தங்கபாண்டியன், “அண்ணே… அப்ப இருந்த நிலைமை வேற இப்ப பாதி ஒன்றியங்கள் அவரை எதிர்க்குறோம். அவரை மாவட்டச் செயலாளரா போட்டு எப்படிண்ணே மாவட்டத்துல கட்சி நடத்துவீங்க? நான் பாளையங்கோட்டை ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர். என் ஏரியாவுக்கு நான் தாண்ணே ராஜா… எங்களை மீறி அவரால எங்க ஏரியாவுல அரசியல் பண்ண முடியாதுங்கண்ணே. இதுபோலதாண்ணே ஆறேழு ஒன்றியம் அவரை எதிர்க்குது. மாவட்டத்துல பாதி ஏரியாவுல அவரை எதிர்த்தாக்க எப்படிண்ணே அவர் கட்சி நடத்த முடியும்?” என்று கேட்டார் தங்கபாண்டியன்.
அப்போது நேரு, “உன்னை மாதிரிதான்யா நானும் ஒரு காலத்துல திருச்சியில பேசிக்கிட்டிருந்தேன். இப்ப என்னாச்சு தெரியுமா?” என்று கேட்டு சிரித்திருக்கிறார்.
தலைவர் நெனைக்கிறதைப் புரிஞ்சுக்கங்க
பின் சீரியசான நேரு, “இங்க பாருங்க… நீங்க சொல்றதெல்லாம் புரியுது. உங்களுக்கு வயசு இருக்கு வாய்ப்புகள் இருக்கு. அதனால பொறுமையா இருங்க. தலைவர் என்ன நினைக்கிறார்னு புரிஞ்சு நடந்துக்கங்க. அவரு (ஆவுடையப்பன்) ரொம்ப சீனியரு. அவரை அசிங்கப்படுத்த வேணாம்னு தலைவர் நெனைக்கிறாரு. வேற ஒண்ணுமில்லை. எம்பி எலக்ஷன் வரைக்கும் கட்சியை நல்லா கொண்டு போங்க. அதுக்கப்புறம் பாத்துக்கலாம்” என்று தங்கபாண்டியனுக்கு அட்வைஸ் பண்ணிய நேரு, “வேணும்னா உங்க ஆளுங்களுக்கு மாவட்ட பதவிகளை போடச் சொல்லட்டுமாய்யா?” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு தங்கப்பாண்டியன், “அண்ணே…எங்களுக்கு அந்த பதவி வேணும்னா நாங்க ஏன் உங்க கிட்ட வந்து பேசப் போறோம்., அவர்கிட்டையே பேசியிருப்போமே? எங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம். எல்லா பதவியையும் அவர்கிட்டையே கொடுங்கண்ணே” என்று நேருவை நோக்கி கையெடுத்து கும்பிட்டு எழுந்துவிட்டார்.
அப்போதும் நேரு, “சரிய்யா… தலைவர் நெனைக்கிறதை புரிஞ்சு நடந்துக்கங்கய்யா” என்று தங்கபாண்டியனை அனுப்பி வைத்துள்ளார்.
ஆக சபாநாயகர் அப்பாவுவின் தீவிர எதிர்ப்புக்குப் பின்னரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராக தொடர்கிறார் என்பதே இந்த அறிவாலயப் பஞ்சாயத்தின் தற்போதைய முடிவு!
அறிவாலயத்தில் இந்தப் பஞ்சாயத்து முடிந்துவிட்டாலும் நெல்லையில் இனிமேல்தான் ஆவுடையப்பனுக்கும் அப்பாவுக்குமான களப் பஞ்சாயத்து தொடங்கப் போகிறது என்கிறார்கள் நெல்லை திமுக நிர்வாகிகள்.
–வேந்தன்
ஆவுடையப்பனை அதிர வைத்த அப்பாவு
ஸ்டாலினிடம் தேம்பித் தேம்பி அழுத மாவட்டச் செயலாளர்