லேப்டாப்பை ஆன் செய்ததும் ஆட்டோமேட்டிக்காக வைஃபை கனெக்ட் ஆனது. சில மெயில் நோட்டிபிகேஷன்கள் சத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தன. ஒரு மெயிலின் சப்ஜெக்ட்டில் மட்டும், ‘சார் அர்ஜெண்ட்’ என்று தலைப்பிட்டு முரசொலி நாளிதழின் சில பக்கங்களும் இணைத்து அனுப்பப்பட்டன. அதை மெல்ல படித்து அதுபற்றி விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“சென்னை மாநகராட்சியில் இருக்கும் வட்டச் செயலாளர்கள் தேர்தல் நேர்காணல் பஞ்சாயத்துகள் மூலம் முடித்துவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் இன்னமும் வட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளிவரவில்லை. ஆனால் சில நாட்களாகவே முரசொலியில் பகுதி கழக செயலாளர்களுக்கான தேர்தலில் போட்டியிட மனு கொடுக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி வருகிறது. இது மாநகர திமுகவினரிடையே குழப்பத்தை அதிகப்படுத்தியது
ஏற்கனவே சென்னை மாநகரத்தில் வட்டச் செயலாளர் பதவிக்கு பலத்த போட்டி போட்டு ஏகப்பட்ட பேர் மனு கொடுத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே இருக்கும் வட்டச் செயலாளர்களை அப்படியே மெயின்டெயின் செய்துகொள்ளலாம் என்று மாசெக்களுக்கும் தேர்தல் நடத்தும் ஆணையர்களுக்கும் தலைமையில் இருந்து உத்தரவு போனது. இதையடுத்து சென்னையின் அந்தந்த கட்சி மாவட்ட அமைப்புகளில் வட்டச் செயலாளர் பதவிகளுக்கு மாவட்டச் செயலாளர், தேர்தல் ஆணையர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதில், ’தலைமையின் அறிவுறுத்தலின்படி, இப்போது இருக்கும் வட்டச் செயலாளர்களே தொடர்வார்கள்’ என்று தேர்தல் ஆணையர் கூற வட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி போட்ட புதியவர்கள் கொதிப்படைந்தனர். இந்த பஞ்சாயத்துதான் கடந்த இரு வாரங்களாக சென்னை மாநகர திமுகவில் தீவிரமாக இருக்கிறது.
இந்த நிலையில் ஓரிரு தினங்களாக வேறொரு குழப்பமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது சென்னை மாவட்டப் பொறுப்பாளர்களின் பெயரில் பகுதிக் கழக தேர்தலுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கலாம் என்ற அறிவிப்பு கடந்த ஓரிரு தினங்களாக திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியில் வந்துகொண்டிருக்கிறது. சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி கழக தேர்தலுக்கான விருப்ப மனு 28 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வழங்கப்படுகிறது என்றும், தேர்தல் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் பகுதி கழக பதவிகளுக்கான தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் 29 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் வழங்கப்படும். விண்ணப்பங்களை ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அந்தந்த தலைமைக் கழக பிரதிநிதியிடம் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்டப் பொறுப்பாளர் மயிலை வேலு அறிவிப்பு கொடுத்திருக்கிறார்.
இன்று முரசொலியை பார்த்த மாநகர திமுகவினர், ‘வட்டச் செயலாளர்கள் அறிவிப்பே இன்னும் வெளிவரவில்லை. அப்புறம் எப்படி பகுதி கழக செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பம் அளிக்க முடியும்? பகுதிக் கழக செயலாளர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்றால், இந்த உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வட்டச் செயலாளரும் ஒரு பகுதி பிரதிநிதியும் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும். ஆனால் இன்று வரை வட்டச் செயலாளர்கள் யார் என்றே அறிவிக்கப்படாத நிலையில், நாளை ஆகஸ்டு 30 ஆம் தேதி பகுதிக் கழக செயலாளர் தேர்தலுக்கு வேட்பு மனு கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள். இதனால் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதுபற்றி அறிவாலயத்தில் விசாரித்தால், இந்த உட்கட்சித் தேர்தலுக்கான வட்டச் செயலாளர்கள் பட்டியல் இன்று (ஆகஸ்டு 29) வரை தலைமையால் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பகுதிக் கழக தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையர்களுக்கு இந்த பட்டியல் வழங்கப்பட்டுவிட்டது. அவர்களுக்குத் தெரியும்’ என்று மேலும் குழப்பமாக பதில் சொல்கிறார்கள். ஒரு வேளை புதிய வட்டச் செயலாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் ஆணையர்களுக்கு மட்டும் தனியாக வழங்கிவிட்டார்களா? ஏற்கனவே இருக்கும் வட்டச் செயலாளர்கள்தான் மீண்டும் நியமிக்கப்பட போகிறார்கள் என்பது தெரிந்துவிட்டாலும் அதை முறையாக அறிவித்துவிட்டுத்தானே… பகுதிக் கழக தேர்தலுக்கான நடைமுறையைத் தொடங்க வேண்டும்? ஆனால் வட்டச் செயலாளர்கள் இன்னார்தான் என்று முடிவு செய்து வைத்துக் கொண்டு அதை வெளியிட்டால் பிரச்சினை வெடிக்கும் என்பதால்… அதையும் வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். வட்டச் செயலாளர்க்ள் பட்டியலை நாளையாவது (ஆகஸ்டு 30) வெளியிட்டால்தான் பகுதி கழக பொறுப்புகளுக்கு போட்டி போடுபவர்கள் முறையான முன்மொழிதலோடு வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்’ என்கிறார்கள்.
சென்னையில் சில பகுதிக் கழக நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘ இதுவரை இல்லாத அளவில் சென்னை உட்கட்சித் தேர்தலில் குழப்பம் அதிகமாகியிருக்கிறது. பகுதிச் செயலாளர் பொறுப்புக்கு விருப்ப மனு வாங்கிய கையோடு துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வீட்டையும், அறிவாலயத்தில் இருக்கும் அன்பகம் கலை அலுவலகத்தையும் நோக்கி நிர்வாகிகள் தங்கள் ஆதரவாளர்களோடு செல்கிறார்கள். ராசா காலையில் உள்ளே இருந்து வீட்டு வாசலுக்கு வந்தாலே பெரும் நிர்வாகிகள் கூட்டம்தான். ’ஏம்ப்பா இங்க வர்றீங்க. மாவட்டச் செயலாளர்கிட்ட போங்கப்பா’ என்று சொல்லி அனுப்புகிறார் ஆ.ராசா. அதுபோல அன்பகம் கலையும் தனக்கே உரிய பாணியில் நைச்சியமாக பேசி அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்று நேற்றுதான் நான்காம் ஆண்டு முடிந்து ஐந்தாம் ஆண்டு ஆரம்பிக்கிறது. திமுக தலைவராக இருந்த ஸ்டாலின் இப்போது முதல்வர் ஸ்டாலின் ஆகிவிட்டார். முதல்வர் பதவிக்கு பொறுப்புகள் அதிகம்தான். ஆட்சியில் கவனம் செலுத்தும் அதேநேரம் கட்சியிலும் அவர் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சென்னை உட்கட்சித் தேர்தலில் ஸ்டாலின் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தடையில்லை : உச்ச நீதிமன்றம்!