kongu caste representation issue in DMK
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான மூன்று முக்கியமான குழுக்களை திமுக தலைமை நேற்று (ஜனவரி 19) அறிவித்திருக்கிறது.
இந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு திமுகவினர் மத்தியில், குறிப்பாக கொங்கு திமுகவினர் மத்தியில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொங்கு திமுகவை சேர்ந்த சில புள்ளிகள்.
“ கொங்கு பகுதியில் அமைந்துள்ள சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநாடு நடைபெறுகிற நிலையில், தேர்தலுக்கு தயாராவதற்கான குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த முக்கியமான ஒருங்கிணைப்பு குழுவில் கொங்கு பகுதியை சேர்ந்த அமைச்சர் முத்துசாமியோ அல்லது முன்னாள் இளைஞரணி செயலாளரான அமைச்சர் மு.பெ.சாமிநாதனோ இடம்பெறவில்லை. சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு இடம்பெற்றுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இந்நேரம் வெளியே இருந்திருந்தால் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கக் கூடும்.
இதேபோல கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிலும் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் யாரும் இடம்பெறவில்லை.
கொங்கு பகுதியான நீலகிரி எம்.பியாக இருக்கும் ஆ.ராசா இதில் இடம்பெற்றுள்ளார் என்பதை தவிர, கொங்கு பூமிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுக்கும் தொடர்பில்லை.
இதேபோல நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரான நாட்டுக் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் இடம்பெற்றுள்ளார். கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
குறிப்பாக இந்த மூன்று முக்கியமான குழுக்களில் கொங்கு வேளாளர்கள், அருந்ததியர்கள் ஆகிய முக்கியமான சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது கட்சிக்குள்ளேயே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொங்குவில் திமுக பலவீனமாக இருப்பதாக ஒரு குறைபாடு தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற குழுக்களில் கொங்குவேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தால் அதிமுகவை இங்கே சமாளிக்க இன்னும் ஏதுவாக இருக்கும். இதை திமுக தலைமை கவனித்து உரிய வகையில் இந்த முக்கிய பணிகளில் சமுதாய பிரதிநிதித்துவத்தை செயல்படுத்திட வேண்டும்” என்கிறார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயிர்த் துணையைத் தேடுபவரா நீங்கள்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
kongu caste representation issue in DMK