ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று(டிசம்பர் 8) மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு,
ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக பேச அனுமதி கேட்டார்.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்தநிலையில் மாநிலங்களவையில் இன்று(டிசம்பர் 9) திமுக எம்பி வில்சன் ஆளுநர் தொடர்பான தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ”ஆளுநர்கள் நியமனத்திலும், நீக்கும் நடைமுறையிலும் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் அரசியல் சாசன பிரிவுகள் 102, 155, 156, 157 மற்றும் 191 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
ஆளுநர்கள் தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், மக்களின் விருப்பத்தை தடுக்கிறார்கள். எனவே தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.
ஆளுநரின் நியமனத்திற்கு உரிய தகுதியை நிர்ணயிப்பதோடு, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் ஆலோசனையோடு ஆளுநர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலை.ரா