திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் இன்று (அக்டோபர் 22) திருவண்ணாமலை கலைஞர் திடலில் நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்டர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான எ.வ.வேலு பொன்னாடை போர்த்தி செங்கோல் வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளார் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, அந்தியூர் செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சீக்ரெட் ஆப் மை எனர்ஜி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நீங்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி. திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது.
திமுக உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1451 ரூபாய் வசூலானது. அதில் 100 ரூபாயை இதே திருவண்ணாமலையை சேர்ந்த ப.உ.சண்முகம் வழங்கினார். 1957 தேர்தலில் முதன்முதலாக நாம் போட்டியிட்டோம். அதில் 15 பேர் வெற்றி பெற்றோம். இதில் மூன்று பேர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ப.உ.சண்முகம், பி.எஸ்.சந்தானம், களம்பூர் அண்ணாமலை.
முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒருவர் திருவண்ணாமலை தொகுதியை சேர்ந்த இரா.தர்மலிங்கம். இன்றும் இவர்கள் பெயரை வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ப.உ.சண்முகம், இரா.தர்மலிங்கம் ஆகியோருக்கு எ.வ.வேலு முயற்சியில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “திமுகவுக்கு திருப்புமுனையை தந்தது திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான். அப்போது ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் நின்றார். திமுக சார்பில் ப.உ.சண்முகம் நின்றார். அந்த தேர்தல் பொறுப்பாளர் கலைஞர்.
அன்று திருவண்ணாமலை கொடுத்த வெற்றிதான் 1967ல் ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது. அதுபோன்று 2021 தேர்தல் வெற்றிக்கு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பயணத்தை திருவண்ணாமலையில் தொடங்கியதுதான் காரணம்.
விழா வேந்தன் எ.வ.வேலு
இந்த பாக முகவர்களின் வடக்கு மண்டல மாநாட்டை எழுச்சியோடு, நடத்தி காட்டியிருக்கும் எ.வ.வேலுவுக்கு எனது பாராட்டுகள்.
எதையும், யாரும் ஏவாமலேயே செய்யக்கூடியவர் எ.வ.வேலு என்று கலைஞர் பாராட்டுவார். திருவண்ணாமலையில் கலைஞர் கோட்டம், மதுரையில் கலைஞர் நூலகம், சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை ஆகியவை எல்லாம் எப்படி அமைய வேண்டும் என்று நான் விரும்பினேனோ, அதன்படி அழகோடும், கம்பீரத்தோடும் அமைத்தவர் எ.வ.வேலு.
கழகத்தின் விழா வேந்தன் என்றால் அது எ.வ.வேலுதான் என்று திருவண்ணாமலையில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் சொன்னேன். அப்படிப்பட்டவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பாராட்டி பேசினார்.
வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரை
“கடந்த மார்ச் 22ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தினோம். அப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்திருக்கிறோம். இதுவரை 4 வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். இன்னும் சென்னை மண்டலத்தில் நடத்த வேண்டியுள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பி.எல்.ஏ.2 நியமிக்கப்பட்டார்கள். பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு வாக்குச்சாவடி முகவர்கள் அடையாள அட்டை வழங்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நம்பித்தான் 40ம் நமதே என நான் முழங்கிக் கொண்டிருக்கிறேன். வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டும். போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இறந்தவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.
பரப்புரை செய்து நமது சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்களிக்கும் மையங்களுக்கு வரவழைக்க வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து அந்த குடும்பத்தில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும்.
உங்கள் பகுதிகளில் இருக்கும் வாக்காளர்கள் யார் யார்? என்ன படித்திருக்கிறார்கள்? வயது என்ன? என்ன தொழில் செய்கிறார்கள்? எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்ற அனைத்து விவரங்களையும் நீங்கள் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
தினமும் கட்சிக்காக ஒருமணி நேரம் ஒதுக்க வேண்டும். அரசின் திட்டங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். யாருக்கு என்னென்ன உதவித் தேவையோ, அதை வாக்காளர்களிடம் கேட்டு நிறைவேற்றித் தர வேண்டும்.
இதற்காக ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களையும், எம்.எல்.ஏ.க்களையும், அமைச்சர்களையும் அணுகுங்கள். நீங்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லோரிடமும் குறிப்பாக அமைச்சர்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொண்டுவரக்கூடிய தகுதி வாய்ந்த எந்த கோரிக்கையாக இருந்தாலும் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு செல்லுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் பூத்தில் இருக்கக் கூடிய அனைவரது வீட்டுக்கும் சென்றுவிடலாம். ஒரு சிலர் சிரித்த முகத்தோடு வரவேற்பார்கள், ஒரு சிலரிடத்தில் வரவேற்பு இருக்காது. அதைபற்றி கவலைப்படாதீர்கள். திரும்ப திரும்ப செல்லுங்கள்.. நம்முடைய சாதனைகளை எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.
எல்லோருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்தி கொண்டு வருகிறோம். நம்முடைய திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்திருக்கிறது.
அப்படி பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதனால் நம் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மகளிர் இலவச பயணம், கலைஞர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் என மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
நம்முடைய திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்கள். 1000 ரூபாய் திட்டம் மகளிரை ஈர்த்திருக்கிறது. நமக்கு வாக்களிக்காதவர்கள் கூட நம்மை பாராட்டுகிறார்கள். இது எதிரிகளை அச்சமடைய வைத்திருக்கிறது” என தெரிவித்தார்.
பிரியா
INDvsNZ: 274 ரன்கள் இலக்கு.. நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்தியா?
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!
சென்னையில் குடியேறும் அமீர் கான் : காரணம் என்ன?