நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி நடத்தும் உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் அருகில் இருக்கும் ஹோட்டலில் புகுந்ததால் இது என்ன உண்ணாவிரதமா, உண்ணும் விரதமா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மதுரையில் இன்று அதிமுக மாநாடு நடைபெறும் இதே நாளில், திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மாநகர தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக மாநாடு மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் முன் கூட்டியே தனியார் பேருந்துகள், வேன்கள் புக் செய்யப்பட்டு விட்டன.
இதனால் திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களை அழைத்து வர சிரமப்பட்ட நிர்வாகிகள், அரசு பேருந்துகளில் கூட்டத்தை அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரும் உண்ணாவிரத போராட்டத்தின் துவக்கத்தில் கலந்துகொண்டு, புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பசி தாங்கமுடியாமல் திமுகவினர் பலர் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் அருகில் உள்ள ஹோட்டலில் புகுந்து தோசை, இட்லி, பொங்கல் என வெளுத்து வாங்கும் காட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகிறது.
கடலூர் கலெக்டர் கேம்ப் அலுவலகம் அருகில் உண்ணாவிரதம் போராட்டத்திற்கு சுமார் 2500 இருக்கைகள் போடப்பட்டது.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நான்கு கவுன்சிலர்கள் 200 பேரை அழைத்து வந்தனர்.
கடலூர் எம்.எல். ஏ. ஐய்யப்பன் பேரனுக்கு பெயர் வைக்க மதுரைக்கு சென்றதால் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் இரண்டு பேர் சுமார் 100 பேரை போராட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கணேசன் மற்றும் நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராசேந்திரன் கணிசமான கூட்டத்தைக் கூட்டி வந்தனர்.
இதுபோக கூட்டம் இல்லை என்ற தகவல்களை கேள்விப்பட்ட அமைச்சரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகர் செயலாளர் ராஜாவை ஒரு காட்டுக்காட்டி விட்டு, காட்டுமன்னார்கோயில் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியிலிருந்து வேன், கார் மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டத்தை கூட்டி வந்தார்.
இருந்தாலும் முழுமையாக இருக்கைகளை நிரப்ப முடியவில்லை.
இதற்கிடையே உண்ணாவிரதம் போராட்டம் துவங்கிய அரை மணிநேரத்தில் அருகில் உள்ள ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் போராட்டத்திற்கு வந்த திமுகவினர் குவிந்தனர்.
இதைப் பார்த்த திமுகவினரே ’இது என்ன உண்ணாவிரதமா அல்லது உண்ணும் விரதமா’ என விமர்சனம் செய்து வருகின்றனர்.