முப்பெரும் விழா: மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின்

அரசியல்

திமுக முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்.

திமுக முப்பெரும் விழா விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணா நகரில் அமைந்துள்ள கலைஞர் திடலில் இன்று (செப்டம்பர் 15) மாலை தொடங்கியது. விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் என தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
விழாவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொகுத்து வழங்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் ’கலைஞரின் கடிதங்கள்’ மற்றும் ‘திராவிட மாடல் ஆட்சி’ ஆகிய தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட்டன. நூல் வெளியீட்டுக்குப் பின்பு, சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கழக முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பேசினர்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கையோடு ஆட்சியை வளப்படுத்தும் நமக்கு, இந்தியா முழுமைக்குமான செயல்படுத்துவதில் சில கடமைகள் உள்ளன. கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை.

நாம் வலிமையான, வளமையான மாநிலமாக இருப்பதால்தான் மக்களுக்கு இந்த அளவு நன்மைகள் செய்ய முடிகிறது. இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால் இவ்வளவு நன்மை செய்ய முடியாது. ஒற்றைத்தன்மை கொண்டதாகவும் ஒற்றைமொழியாகவும் இருக்கும் இந்தியை நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் கல்விக்கொள்கை மூலம் நம்முடைய உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள். இவற்றைத் தடுக்க நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் நம் கூட்டணி சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவின் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர, நீங்கள் இப்போதே களப் பணியாற்ற வேண்டும். அந்தப் பெருமையை நாம் தக்க வைக்க வேண்டுமானால் 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

இதன் மூலம் இன்னும் ஓரிரு வருடங்களில் வர இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுகவின் முப்பெரும் விழாவில் இருந்தே தொடங்கிவிட்டார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.

ஜெ.பிரகாஷ்

‘நீங்களே ஒரு டெம்ப்ரவரி தான்’: எடப்பாடியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.