மீனவர்களை மீட்காமல் உறங்காதே…. நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Selvam

தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வலியுறுத்தியும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (பிப்ரவரி 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். dmk mps protest parliament

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, எம்.பி-க்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், துரை வைகோ, தமிழச்சி தங்கபாண்டியன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ‘Bring Back Our Fishermen’, ‘No more arrests’, ‘ஒன்றிய அரசே உறங்காதே, மீனவர்களை மீட்காமல் உறங்காதே’ உள்ளிட்ட பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி,

“இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்து துன்புறுத்தி வருகின்றனர். இதுவரை ​​கிட்டத்தட்ட 97 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 210 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. படகுகள் இல்லாமல் மீனவர்கள் என்ன செய்ய முடியும்?

இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவ குழுக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்க குழுக்களை அமைப்பதாக உறுதியளித்த மத்திய அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் பேசி மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றார். dmk mps protest parliament

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share