திமுக எம்.பி.க்கள் கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு செல்ல உத்தரவு!
நாடாளுமன்றத்திற்கு இன்றும் (டிசம்பர் 13) நாளையும் (டிசம்பர் 14) தவறாமல் வருகை தர வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு அக்கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மணிப்பூர் விவகாரம், அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆகியவை தொடர்பாக கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக எம்.பி.க்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும்- அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்குமான தொடர்பு குறித்த விவகாரத்தை குறிப்பிட்டு அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு உருவாக்கப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவும், உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த மசோதாவை நடப்பு கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அப்போது இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றும், நாளையும் திமுகவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வந்திருக்க வேண்டும் என கொறடா உத்தரவிட்டுள்ளார்.
முக்கியமான மசோதாக்களின் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மழை… 25 மாவட்டங்களில் விடுமுறை : மாணவர்கள் குஷி!
ஹெல்த் டிப்ஸ்: உணவு விஷயத்தில் குறையாத எடை… என்னதான் தீர்வு?