மாநிலங்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது திமுக எம்.பி எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதியமைச்சரும் தமிழிலேயே பதிலளித்தார்.
மாநிலங்களவையில் இன்று (டிசம்பர் 20) கேள்வி நேரத்தின்போது திமுக எம்பி வில்சன், ”தமிழக அரசுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை ரூ.10,879 கோடியை எப்போது தருவீர்கள்.
இது 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை உள்ள பாக்கி தொகையாகும்” என தமிழில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களவையிலும் இதே கேள்வி கேட்கப்பட்டது. 10 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை.
மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றை தமிழகம் வழங்கினால்தான் நிதியை விடுவிக்க முடியும்.
2022 ஜூன் மாத அளவில் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1,200 கோடி மட்டுமே தர வேண்டி உள்ளது. தமிழ்நாடு நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கை 10 நாட்களுக்கு முன்புதான் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
நிதியை பயன்படுத்தியது தொடர்பான தமிழக அரசின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே நிதி ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கப்படும்.
ஆனால் குத்துமதிப்பாக 10 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் அதற்கான நம்பர் என்னிடம் இல்லை. நன்றி” என அவரும் தமிழிலேயே பதிலளித்தார்.
ஜெ.பிரகாஷ்
பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!
குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!