தமிழக அரசு மற்றும் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி வரும் ஆளுநர் ரவி தன்னுடைய வாயை அடக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்தியாக சுதந்திரப் போராட்டம் தொடங்கும் நேரத்தில் ஆரியம், திராவிடம் என்ற கருத்தாக்கம் பரப்பப்பட்டது. தமிழகத்தில் இன்றளவும் கொண்டாடப்படும் சிலர், பிரிட்டிஷாரிடம் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்தனர்” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த நிலையில், ’ஆளுநர் மாளிகையே அடைக்கிடு வாயை’ என்ற தலைப்பில் திமுக பொருளாளரும், எம்.பியுமான டி.ஆர் பாலு கடும் கண்டன அறிக்கையை இன்று (அக்டோபர் 24) வெளியிட்டுள்ளார்.
மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி…
அதில் ”தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமானப்படுத்தக்கூடிய வகையிலே பல்வேறு தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றார்.
தமிழக அரசு சட்டமன்றத்திலே நிறைவேற்றிய நீட் விலக்கு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் ராஜ் பவனிலே குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அந்த சட்டம் முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல் மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி நிகழ்ச்சிகளை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகின்றார்.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்று சொல்லுங்கள் என்றெல்லாம் தொடர்ந்து பேசி வருகின்றார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழை பின் தள்ளக்கூடிய வேலைகளை தமிழக ஆளுநர் ரவி ஈடுபட்டு வருகிறார்.
தவறான குற்றச்சாட்டு!
அது மட்டும் இல்லாமல் வெள்ளையனை எதிர்த்து வீர போர் புரிந்து மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களுடைய தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றி வரக்கூடிய நிலையில் ஆளுநர் ரவி, தமிழக அரசின் மீது ஒரு தவறான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.
தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை தேடிப் பார்த்தாலும் அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் இவர்களுடைய பிறந்தநாள் உள்ளிட்ட பல விஷயங்களை அரசு கொண்டாடி வருகிறது.
மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை குடியரசு தின விழாவில் அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்தது மத்திய பாஜக அரசு.
தமிழக அரசு சுதந்திரத்திற்காக போராடியஅத்தனை தமிழர்களுக்கும், தலைவர்களுக்கும் மணிமண்டபம் கட்டுவது, சிலை அமைப்பது என அவர்களுடைய வீரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்க்க கூடிய விஷயத்தை தொடர்ந்து செய்து வருகிறது.
எங்குமே சுணக்கம் காட்டியது இல்லை. தொடர்ந்து அவர்களுக்கான உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வாயை அடக்க வேண்டும்!
ஆனால் இவற்றையெல்லாம் பார்க்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, வேண்டும் என்றே தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரக்கூடிய இந்த போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே அதுவரை ஆளுநர் மாளிகையே தன்னுடைய வாயை அடக்க வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சியர்கள் உருவாக்கிய கவர்னர் என்ற நியமன பதவியில் உட்கார்ந்து கொண்டு தொடர்ந்து பொய்களை பேசுகிறார் ஆளுநர். அது மட்டுமல்லாமல் திருக்குறளை சுட்டிக்காட்டும் ஆளுநர், முதலில் தமிழ்நாட்டினுடைய வரலாற்றை முழுமையாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு இப்படி பொய் பேசுவது சரியானது அல்ல” என்று டி.ஆர் பாலு தன்னுடைய கடுமையான குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’போராட்டம் வாபஸ்’: ஆம்னி பேருந்துகள் இன்று வழக்கம்போல் இயங்கும்!
பாஜக குழுவில் திமுக அமைச்சருக்கு வேண்டியவர்!