அவைகுறிப்பிலிருந்து பெரியார் பெயர் நீக்கம்: ஸ்டாலின் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து திமுக எம்.பி எம்.எம் அப்துல்லா பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசியது அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மறுவரையறை 2019- திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மீது பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, “ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என கூறியதோடு “தந்தை பெரியார்” என்று பேசினார்.
இது நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. பாஜக எம்.பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.பி அப்துல்லாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், “இந்த வார்த்தைகள் அரசியலமைப்பிற்கு எதிரானது. அவற்றை பொறுத்துக் கொள்ள முடியாது. பேச்சு சுதந்திரம் என்பது சில வரம்புகளுக்கு உட்பட்டது” என்றார். மேலும் எம்.பி அப்துல்லாவின் பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “திமுக உறுப்பினர்கள் பெரியாரின் மேற்கோளைப் பயன்படுத்துவதை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று அவையில் தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, “மத்தியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் 370ஆவது பிரிவை மீண்டும் அமல்படுத்தி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவோம். ஒவ்வொரு இனமும் தங்களது தலைவிதியை தீர்மானித்துக் கொள்ள உரிமை உண்டு என தந்தை பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “திருச்சி சிவா திமுகவின் பிரதிநிதியாக பேசுகிறாரா? அல்லது ஒட்டுமொத்த இந்தியா கூட்டணிக்காக பேசுகிறாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு இந்தியா கூட்டணி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியாரின் பெயர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சலார் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!
வெள்ள நிவாரணம் : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது?: அமைச்சர் பேட்டி!