ஜெகத்ரட்சகனை குறிவைத்து ரெய்டு: 2016 இல் கலைஞர் ரியாக்‌ஷன்!- இன்று ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

dmk mp jagathratchagan it raid kalaignar stalin reaction

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (அக்டோபர் 5) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெகத்ரட்சகன் தொடர்புடைய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த வருமான வரி சோதனை நடக்கிறது.

இன்று காலையில் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் இருந்தார் ஜெகத்ரட்சகன். அப்போது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினரோடு அங்கே வருமான வரித்துறையினர் சென்றனர். அப்போது தனது உதவியாளர்களுடன் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார் எம்.பி. அவரை மட்டும் வீட்டுக்குள் இருக்கச் சொன்ன அதிகாரிகள் மற்ற அனைவரையும் வீட்டு வாசலில் நிற்க வைத்தனர்.

திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, “பாஜக ஆட்சிக்கு வந்த புதிதிலேயே அதாவது 2016 இலேயே ஜெகத்ரட்சகன் மீது இதேபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை ஏவியது. ஒரு நாள், இரு நாள் அல்ல… மூன்று நாட்கள் 2016 ஜூலை மாதம் ஜெகத்ரட்சகனை குறிவைத்து ரெய்டு நடத்தினார்கள்.  ரெய்டின் போது ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினரை அப்போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகவும் செய்திகள் வந்தன.

அப்போது திமுக தலைவராக இருந்த கலைஞரை தினமும் சென்று சந்திக்க கூடியவர்கள் பட்டியலில் இருந்தவர் ஜெகத்ரட்சகன்.  மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஜெகத்ரட்சகனை வீட்டுக்குள்ளேயே வைத்து சோதனை நடத்திய வருமான வரித்துறையினரின் நடவடிக்கை கலைஞருக்கே அப்போது சந்தேகத்தை வரவழைத்து.

2016 ஜூலை 15 ஆம் தேதி கலைஞர் வெளியிட்ட அறிக்கையில், ‘ ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித் துறையினரின் நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

வருமான வரித் துறை சோதனை என்ற பெயரில் மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகனை இல்லத்தில் சிறைக் கைதி போல் அடைத்து வைத்திருப்பது முறைதானா? ஜெகத்ரட்சகன் இல்லத்தில் கடந்த மூன்று தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகக் கூறி மூன்று நாட்களாக அவரை சிறைக்கைதி போல வீட்டி லேயே அடைத்து வைத்திருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

வருமான வரித்துறையினர் ஒரு வீட்டில் சோதனை மேற்கொள்வதையோ, அல்லது விசாரணை நடத்துவதையோ தவறு என்று கூறவில்லை.

ஆனால், ஜெகத்ரட்சகன் தொடர்புடைய ஏறத்தாழ 40 இடங்களில் சோதனை மேற்கொள் வதாகக் கூறி அனைத்து இடங்களிலும் அதிகாரி களை அனுப்பிய பிறகும் கடந்த மூன்று நாட்களாக ஜெகத்ரட்சகன் அவர்களை, அவருடைய உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாமல் வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பான வகையில், ஒருவருடைய அன்றாடச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதாகும் ((illegal Detention). வருமான வரித் துறையினரின் இத்தகைய நடவடிக்கைக்கு அரசியல் காரணங்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகளை அனுப்பி சோதனையை விரைவுபடுத்தாமல், ஜெகத்ரட்சகன் அவர்களை கடந்த 3 நாட்களாக இரவு பகல் பாராமல் வீட்டில் கைதி போல் அடைத்து வைத்திருக்கும் வருமான வரித்துறை யினரின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மேலும், யாரிடமாவது இதுவரை வரி செலுத்தாத வருவாய் ஏதேனும் இருந்தால், வரும் 30.9.2016 க்குள் வருமான வரி செலுத்தி நேர் செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், தற்போது திரு.ஜெகத்ரட்சகன் அவர்களின் வீட்டில் மேற்கொள்ளப்படும் வருமான வரித் துறையினரின் நடவடிக்கை வியப்பளிக்கிறது’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கலைஞர்.

இந்த நிலையில்… இப்போது நடக்கும் ரெய்டு குறித்து ஜெகத்ரட்சகனை சுற்றியுள்ளவர்களிடம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் விசாரித்து அறிந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து துரைமுருகனிடம் விசாரித்துள்ளார்” என்று திமுக வட்டாரங்களில் காலையில் தெரிவித்தனர்.

இதன் பின் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 5)  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  “ஒன்றிய  பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீட்டில் சோதனை நடத்துவதும் சுயேச்சையான விசாரணை அமைப்புகளை இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு எதிராக, தவறாகப் பயன்படுத்தி வருவதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகளாகும்.

எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.  அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக அரசு  வசதியாக மறந்துவிடுகிறது.  அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க பயப்படுவது தெளிவாகத் தெரிகிறது.  எதிர்க்கட்சியினரை நோக்கிய வேட்டையை நிறுத்திவிட்டு  மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ODI World Cup 2023: மூன்றாவது முறையாக சாதிக்குமா இந்தியா?

ஐடி சோதனை: பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனுமதி மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share