டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து திமுக எம்.பி.அப்துல்லா ஆதரவு தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். எனினும் இவ்விவகாரத்தில் டெல்லி போலீஸ் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தசூழலில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது இரண்டு எப்.ஐ.ஆரை டெல்லி போலீஸ் பதிவு செய்தது.
எனினும் வீராங்கனைகள் தங்களது போராட்டத்தை கைவிடவில்லை. பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
அவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில் இன்று (மே 1) திமுக எம்.பி.அப்துல்லா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்று எம்.பி.அப்துல்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
`போதிய ஆதாரம் கொடுத்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில் இன்று இங்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தேன்.
இந்தியாவின் கடைகோடி மாநிலத்தில் இருந்து வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு மிக்க நன்றி என வீராங்கனைகள் தெரிவித்தார்கள். மத்திய அரசு அவர்களுக்கு வழங்கும் மின்சாரம், குடிநீரை நிறுத்தியுள்ளது.
முதல்வர் மிக குறுகிய கால இடைவெளியில் டெல்லி வந்ததால் அவரால் நேரில் வந்து மல்யுத்த வீராங்கனைகளை சந்திக்க முடியவில்லை` என கூறினார்.
பிரியா
இது உங்களுக்கான தேர்தல் அல்ல: மோடிக்கு ராகுல் பதில்!
அதிமுகவின் போலி பொதுக்குழு கலைக்கப்படுகிறது: ஓபிஎஸ்