அடுத்த ஆண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் சர்வாதிகார போக்கை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோவையில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியபோது,
“ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு தனி மனிதரால் அநீதி இழைக்கப்பட்டால் அதனை இன்னொரு ஆட்சி சரிசெய்து கொள்ளலாம் அல்லது நீதிமன்றத்திற்கு சென்று நிவாரணம் தேடி கொள்ளலாம்.
ஆனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும்போது நாடு ஸ்தம்பித்து போகிறது. இந்தியாவில் நடைபெறுகிற மதவாத, எதேச்சதிகார அரசை ஸ்டாலின் எதிர்த்துக்கொண்டிருக்கிறார்.
வருகிற 20-ஆம் தேதி கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறக்க உள்ளார். அதற்கான அழைப்பிதழை கொடுக்க பீகாருக்கு சென்று முதல்வர் நிதிஷ்குமார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் வழங்கினேன்.
அப்போது நிதிஷ்குமார் என்னிடம், இந்தியாவின் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய மதச்சார்பின்மையை காப்பற்றக்கூடிய ஒரே வழிகாட்டி தலைவர் ஸ்டாலின் தான். இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும் என்று ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தேன். இந்தியாவினுடைய நிலப்பரப்பில் பூகோள அடிப்படையில் மத்தியில் உள்ள பீகாரில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது சரியாக இருக்கும் என ஸ்டாலின் தெரிவித்ததாக கூறினார்.
கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக்கு காரணமாக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
சிறு சிறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி ப.சிதம்பரம் முதல் அனைத்து தலைவர்களையும் இந்த கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள்.
அதானி குழுமத்தின் பங்கு சந்தை மோசடி குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் கூறாமல் பிரதமர் மோடி மெளனம் சாதிக்கிறார்.
இந்த விவகாரத்தில் மோடி மெளனம் சாதித்தால் அவரும் குற்றவாளி என்று நாடாளுமன்றத்தில் பேசினேன்.
செந்தில் பாலாஜியை முடக்கினால் கொங்கு மண்டலத்தில் தாமரை மலரும் என்று நினைக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை கோவையில் கொண்டாடுவோம். அப்போது விழா மேடையில் இந்தியாவின் பிரதமர், தமிழகத்தின் முதல்வர் 10-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இருந்து இங்கு வந்து கலைஞர் வாழ்க என்று முழங்குவார்கள்.
அப்போது மோடி, அமித்ஷா என்ற இருவரும் இந்தியாவில் இருக்க மாட்டார்கள்” என்று ஆ.ராசா தெரிவித்தார்.
செல்வம்
TNPL: குருசாமி அஜிதேஷ் அதிரடி- கடைசி ஓவரில் ட்விஸ்ட்!
அன்புமணி மனைவியின் ஐஸ் பேக்டரிக்கு சீல்!

Comments are closed.