கள்ளச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு திமுக எம்.எல்.ஏ-க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர்களுமான உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ஜூன் 22-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன், “ராமதாஸும் அன்புமணியும் எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களை அவர்கள் நிரூபித்தால் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயார். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அவர்கள் இருவரும் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலக தயாரா?” என்று கேள்வி எழுப்பினர்.
இந்தநிலையில், கள்ளச்சாராய விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேசியதற்காக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் தரப்பில் திமுக எம்.பி வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், நஷ்ட ஈடாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இருவரும் தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…