தனியார் நிறுவன ஊழியர்களை மிரட்டிய வீடியோ வைரலான நிலையில், தாம்பரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா மீது மறைமலைநகர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் பூஜா கோயல் என்பவருக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் 2018 – 2028ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில், டேஜங் மொபாட்ஸ் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல், தனியார் நிறுவனத்தை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.
இன்னும் 6 ஆண்டுகள் குத்தகை காலம் இருக்கும் நிலையில், அது முடிவடைவதற்கு முன்னால் அந்த நிறுவனம் தங்களால் வெளியேற முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் பூஜா கோயல், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜாவுடன் சேர்ந்து தனியார் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்களை எஸ்.ஆர்.ராஜா தகாத வார்த்தைகளில், ஒருமையில் பேசி மிரட்டும் வீடியோ நேற்று (செப்டம்பர் 21) சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் எஸ்.ஆர்.ராஜா தனியார் நிறுவன ஊழியரிடம், “நீ என்ன பெரிய ஆளா?” என்று கேட்கையில்,
“உங்களுக்கு ஓட்டு போட்ட கட்சி ஆளுக்கே நீங்கள் மரியாதை கொடுக்கவில்லை. தலைமைச் செயலகத்துக்கு சென்று உங்கள் மீது புகார் கொடுக்கப் போகிறேன்” என அந்த நபர் கூறியதும் ,
மிகவும் கோபமடைந்த எஸ்.ஆர்.ராஜா, தகாத வார்த்தைகளில் பேசுகிறார். மேலும், “கை கால்களை உடைத்து விடுவேன்” என மிரட்டுகிறார்.
இதுகுறித்து டேஜங் மொபாட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மறைமலைநகர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா மீது ஆபாசமாக திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி தனியார் நிறுவனத்துக்குள் நுழைதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா கூறும்போது, “மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தின் நிலத்தினுடைய உரிமையாளர் எனது நெருங்கிய நண்பர்.
என்னுடைய இடத்தில் இயங்கி வரும் நிறுவனத்தில் நானே செல்ல முடியவில்லை என்று அவர் என்னிடம் கூறினார்.
நான் அவருடன் அந்த தனியார் நிறுவனத்திற்கு சென்ற போது, எங்கள் காரை அவர்கள் உள்ளே விடவில்லை. கேமரா செட் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த ஊழியர் பேசியது வெளியே வரவில்லை.
அவர் ஆபாசமாக பேசிய போது, நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று அவரிடம் கூறினேன். அவர்கள் பேசியதை கட் செய்து விட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி பத்திரிகையாளரிடம் கூறும்போது, இரண்டு மாதங்களுக்கு முன்பே இவ்விடத்தை காலி செய்ய வேண்டுமென எஸ்.ஆர் ராஜா போன் மூலம் எங்களுக்கு மிரட்டல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தனியார் நிறுவனத்தை தனது இடத்தில் இருந்து வெளியேறுமாறு நில உரிமையாளர் மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 2022 ஆகஸ்ட்டில் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!
நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழகத்தில்!