டிஜிட்டல் திண்ணை: காலமான புகழேந்தி… புதிய மாவட்டப் பொறுப்பாளர் யார்?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் விழுப்புரம் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான நா. புகழேந்தி காலமான செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“1973 இல் திமுகவில் கிளைச் செயலாளராக பணியாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் முழுமையாக கட்சியில் இருந்து 2020 முதல் மாவட்டச் செயலாளராக உயர்ந்த நா. புகழேந்தி எம்.எல்.ஏ. ஏப்ரல் 6 அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார்.

நேற்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட விழுப்புரம் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இருந்தபோது திடீரென மயக்கமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று காலமாகிவிட்டார். புகழேந்திக்காக விசிக விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் தனது ஒரு நாள் பரப்புரையை ரத்து செய்தார்.

புகழேந்தியின் மறைவு வருத்தத்துக்கு உரியது என்ற நிலையில், எதார்த்த அரசியலில் அடுத்து அந்த மாவட்டச் செயலாளர் பதவிக்கு யார் என்ற விவாதங்கள் விழுப்புரம் திமுகவில் தொடங்கிவிட்டன.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில்… புகழேந்தி இடத்துக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்க வேண்டிய சூழலில் திமுக தலைமை இருக்கிறது.

இந்நிலையில் விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டத்தின் பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர் கௌதம சிகாமணி பெயரும், விழுப்புரம் எம்.எல்.ஏ.வான டாக்டர் லட்சுமணன் பெயரும் அடிபடுகின்றன.

காலமான புகழேந்தி அமைச்சர் பொன்முடியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். 2020 இல் பொன்முடி திமுகவின் துணைப் பொதுச் செயலாளரான நிலையில், தான் வகித்து வந்த விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பதவியை புகழேந்திக்கு கொடுத்தார். அப்போதே மாசெ பதவிக்கு லட்சுமணனும் முயன்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் நடக்கும் எம்பி தேர்தலில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த கௌதக சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை நியமிக்க பொன்முடி தரப்பில் தலைமையிடம் வலியுறுத்தப்படுகிறது.

அதேநேரம் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த புகழேந்தி அம்மாவட்டத்தின் முக்கியமான சமுதாயமான வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதே சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனுக்கு வாய்பபு வழங்கினால் கட்சிக்கு நல்லது என்றும் தலைமைக்கு விழுப்புரத்தில் இருந்தே கோரிக்கைகள் சென்றிருக்கின்றன.

லட்சுமணன் எம்.எல்.ஏ. ஏற்கனவே மாப்பிள்ளை சபரீசனுடன் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார். இந்த நெருக்கமும் இப்போது வேலை செய்யக் கூடும் என்கிறார்கள்.

பொன்முடியின் மகனான கௌதமசிகாமணியா, விழுப்புரத்தில் வன்னியர் சமுதாய பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் டாக்டர் லட்சுமணனா என்ற இரு விவாதங்கள் திமுக தலைமையில் நடந்து வருகின்றன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திருச்சி : பாஜக தலைவர் நட்டா ரோடுஷோவுக்கு அனுமதி?

பெங்களூரு:120 அடி தேர் கவிழ்ந்து விபத்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share