பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை: கருணாநிதி எம்.எல்.ஏ
வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி இன்று (ஜனவரி 19) விளக்கமளித்துள்ளார்.
திருவான்மியூரில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணனின் வீட்டில் 17 வயது இளம்பெண் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். வீட்டு வேலைக்கு வந்த அப்பெண்ணை ஆன்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்த அப்பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் மதிவாணன் அவரது மனைவி இருவர் மீதும், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, “நான் குரோம்பேட்டையில் மக்கள் பணியாற்றி வருகிறேன்.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக எனது மகனுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அவர்கள் எப்போதாவது எங்கள் இல்லத்திற்கு வருவார்கள். நானும் எப்போதாவது தான் என் மகன் இல்லத்திற்கு செல்வேன்.
அவர்கள் வீட்டில் என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாக தெரியவில்லை. அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தில் நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.
காவல்துறை இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நான் தலையிட மாட்டேன். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி வருகை: ஸ்ரீரங்கம் கோவிலில் பொது தரிசனம் ரத்து!
அதிமுகவில் இணைந்தது ஏன்? – காயத்ரி ரகுராம் விளக்கம்!