2021 தேர்தல் கடன்… நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ… இவர் மட்டும்தானா?

அரசியல்

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் செக் பவுன்ஸ் வழக்குக்கு ஆளாகி, நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. ஒருவர்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கடந்த நவம்பர் 5 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்ட கழக ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அரசுத் திட்டங்களை கள ஆய்வு செய்யும் பயணத்தின் இடையே கழக ஆய்வையும் நடத்துவதாக அறிவித்து, அதன்படியே முதலில் கோவையில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாட்டை ஆராய்ந்தார் ஸ்டாலின்.

அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நாம் நிர்வாகிகளாக இருக்க முடியும். எனவே தொண்டர்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுங்கள். அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வையுங்கள்’ என்று அறிவுரை அளித்தார்.

இந்நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி  செக் மோசடி வழக்கில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி குற்றப் பத்திரிகை நகலை கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.

2021  சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவில் இணைந்த டாக்டர் லட்சுமணன் அறிவிக்கப்பட்டார். அதுவும் அப்போதைய அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து அவர் களம் கண்டார்.

தேர்தல் செலவுக்காக தனது நெருங்கிய நண்பரும் சக டாக்டருமான விழுப்புரம் சிங்காரத் தோப்பு ரங்கநாதன் என்பவரிடம் இருந்து… 2021 மார்ச் மாதத்தில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

தேர்தலில் அதிமுகவின் சி.வி. சண்முகத்தை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து திமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் டாக்டர் லட்சுமணன்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

எம்.எல்.ஏ.ஆன பிறகு கடன் கொடுத்த நண்பர் ரங்கநாதன்  சில முறை பேசிப் பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் லட்சுமணன் சில செக்குகளை கொடுத்திருக்கிறார். அந்த செக்குகளும் எம்.எல்.ஏ.வின் அக்கவுண்டில் பணம் இல்லாமல் பவுன்ஸ் ஆனதால்,  தனது நண்பர் என்பதையும் தாண்டி கடனைத் திருப்பித் தராததால், விழுப்புரம் நீதித்துறை நடுவர் மன்றம் 1 இல் வழக்குத் தொடுத்திருக்கிறார் டாக்டர் ரங்கநாதன்.

வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் 7 ஆம் தேதி, விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து அன்று,  எம்.எல்.ஏ. லட்சுமணன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  அவரிடம் குற்ற பத்திரிகை நகலினை நீதிமன்ற ஊழியர்கள் வழங்கினர். இந்த வழக்கின் மீதான விசாரணையை வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் எம்.எல்.ஏ. லட்சுமணனுக்கும் அவரது நண்பர் டாக்டர் ரங்கநாதனுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல் பிரச்சினை என்றாலும்… திமுக எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் இந்த விவகாரம் பெரும்  பேசுபொருளாகியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்களின் வாட்ஸ் அப் க்ரூப்புகளில் கடனை கட்ட முடியாமல் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ. என்று லட்சுமணன் போட்டோக்களும் செய்திகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக நாம் திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடமே பேசினோம்.

“தலைவர் கள ஆய்வில் தொண்டர்களை நிர்வாகிகள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது திமுக ஆட்சியாக இருந்தாலும் திமுகவின் நிர்வாகிகள் பலர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை முதல்வரே உணர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில்தான் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளோம். குறிப்பிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுடன் நெருக்கமாக இருக்கும் காரணத்தால் வளமாக இருக்கிறார்கள்,

ஆனால்  கணிசமான திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று டாக்டர் லட்சுமணன் போன்று 2021 தேர்தலுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வட்டி கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றனர்.

நாம் அவர்களிடம், “பணத்தை வைத்துக் கொண்டே இதேபோல,  பணம் இல்லை ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தலைமையிடம் அனுதாபம் தேடவும்  வாய்ப்பிருக்கிறது என்று திமுகவினரே பேசுகிறார்களே?” என கேட்டோம்.

“அரசியல்வாதிகள் மீது இப்படிப்பட்ட சந்தேகம் எழ  வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதேநேரம் இப்படி கடன்காரன் பெயரெடுத்தால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்காது என்ற நடைமுறை சிக்கலும் இருக்கிறது. அதனால் அந்த ரிஸ்க்கை எடுக்க மாட்டார்கள். கடன் வாங்கிக் கட்டாதது அவரது சொந்த விஷயமாக இருந்தாலும், திமுகவில் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் இதே நிலையில்தான் இருக்கிறார்கள்.  இது மாநில ரீதியாக கள ஆய்வு செய்யவேண்டிய விஷயம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

TNPSC குரூப் 4: இன்னும் 13 நாள் தான்… ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?

முக்கிய கட்சி நிர்வாகிகள் இருவரை சஸ்பெண்ட் செய்த திருமா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *