தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக, பத்தாண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
அப்போது முதல்வராக 2021 மே 7ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், முதல்நாளே 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

முதல் நாளில் 5 கையெழுத்து
அதன்படி, ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000 வழங்கும் திட்டம்,
ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைக்கப்படும் என்று உத்தரவு.
தமிழ்நாட்டில் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டம்,
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் திட்டம்,
மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை அமைக்கும் உத்தரவு ஆகிய 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

277 கோடியே 13 லட்சம் பயணம்
இதில் கையெழுத்தான அடுத்த நாளே தொடங்கப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து பயணம் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அரசு பேருந்துகளில் பெண்கள் இதுவரை 277 கோடியே 13 லட்சம் கட்டணமில்லா பயணங்களை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மே 5ஆம் தேதி தெரிவித்தார்.
மேலும் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

பெண்கல்வி வளர்ச்சி திட்டங்கள் அதிகரிப்பு
அதன்படி கல்வியில், அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் உயர்கல்வியை தொடர்வதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ’புதுமைப்பெண் திட்டம்’ பெண்கல்வி வளர்ச்சியில் முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முன்னோடி திட்டங்களாக அமைந்துள்ளன. மதுரையில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” வரும் ஜூன் மாதம் திறக்கப்பட இருக்கிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த திட்டம்
இன்னுயிர் காக்கும் 48 மணி நேரத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகியவை மருத்துவத் துறையில் திமுக அரசு கொண்டுவந்த அர்த்தமிக்க திட்டமாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொது சுகாதார வல்லுநர் மருத்துவர் அமலோற்பவநாதன். கூறுகையில், “திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களிலேயே சிறந்தது ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தான் என்றும், இந்தியாவிலேயே மிகச் சிறந்த திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு கோடிக்கும் மேலான பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியாக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், சன்னாசிப்பட்டியிலுள்ள மீனாட்சி என்பவருக்கு முதல்வர் ஸ்டாலின் கையால் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.
கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு மருத்துவமனை ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 5ஆம் தேதி இந்திய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்க உள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக, தனியாக வேளாண்மை நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரமாண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டி
விளையாட்டுத் துறையின் சார்பாக சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதற்காக சர்வதேச செஸ் வீரர்கள் உட்பட பல தரப்பினரின் பாராட்டுகளையும் தமிழ்நாடு அரசு பெற்றது .
இந்நிலையில் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணாவின் பிறந்த நாளான வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இதேபோல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை நிறைவேற்றியுள்ளார். பெண் ஓதுவார்களை பணியில் அமர்த்தியதும் சமூக நீதி திட்டங்களாக, திராவிட மாடலின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

75 சதவீத வாக்குறுதி நிறைவேற்றம்
தொழிற்துறையில், முதலீடுகளை ஈர்க்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டார்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, தூத்துக்குடி மற்றும் கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் மதிப்பில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன்கள் ரத்து செய்யப்பட்டு 25 ஆயிரத்து 219 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 210க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக அரசுக்கு எதிர்ப்பு!
கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் நாள்தோறும் கூறிவருகின்றன.
சமீபத்தில் கூட 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றியதை கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக அரசு பின்வாங்கியது. அதே போல் டாஸ்மாக் விவகாரத்திலும் அரசு கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே நாளில் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.