டிஜிட்டல் திண்ணை: 15 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- ஸ்டாலின் கையில் ‘ரெட்’ லிஸ்ட்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில மெசேஜ்கள் வந்து விழுந்தன. அதில் ஒன்று, ‘திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் பற்றிய பேச்சுதான் கட்சி முழுதும் ஓடிக் கொண்டிருக்கிறது.

என்ன நடக்கிறது என்று  சொல்லுங்கள்” என்றிருந்தது. மேலும் சில மெசேஜ்களும் திமுக மாசெக்கள் தேர்தல் பற்றி வந்திருந்தது. அதையெல்லாம் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“திமுகவில் அண்ணா, கலைஞர் காலங்களில் கிளைச் செயலாளர் தேர்தல் துவங்கிய  மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களுக்குள் ஒட்டுமொத்த உட்கட்சித் தேர்தலும் முடிந்துவிடும்.

ஆனால் வைகோ பிரிந்த பிறகு  இந்த டியூரேஷன் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது.  இப்போது சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.

கிளைக் கழக செயலாளர் தேர்தல் முதல் ஒன்றிய, பகுதிச் செயலாளர்கள் வரை எல்லாம் நடந்து முடிந்துவிட்ட நிலையில் இனி மிச்சம் இருப்பது மாவட்டச் செயலாளர் தேர்தல்தான்.  மாவட்டச் செயலாளர் தேர்தல் மூலம்  திமுகவின்  உட்கட்சித் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. 

ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இன்னும் இரு வருடங்களுக்குள்  நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இதன் காரணமாக மாவட்டச் செயலாளர் பதவிகளில் மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற  விவாதம் கட்சிக்குள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இரு தொகுதிகள் ஒரு மாவட்டம் என்ற கணக்கில் வரையறை செய்யப்பட்டு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  இவர்களில் சிலர் மீது  கட்சிப் பணிகளில்  ஈடுபாடு காட்டாமல் இருக்கிறார்கள், உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கட்சித் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு சென்றிருக்கிறது. 

இதே நேரம் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் பற்றி ஒரு பிரத்யேக ரிப்போர்ட்டும் திமுக தலைவரின் டேபிளுக்கு கடந்த மாதமே சென்றிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உத்தி வகுப்பாளராக  பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர்.

அவரது ஐபேக் நிறுவனத்தின் சார்பில் தேர்தலின்போது திமுகவுக்காக பணியாற்றியவர்களிலேயே மிகத் திறமையாக பணியாற்றிய பலரை அப்போதே சபரீசன் அடையாளம்  கண்டு வைத்திருந்தார். ஐபேக் அதிகாரபூர்வமாக தனது தேர்தல் பணியை முடித்துவிட்டாலும்… அந்த மிகத் திறமையான பணியாளர்களை திமுகவுக்காக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார்  சபரீசன்.

இப்போது பெனின்சுலா எனப்படும் நிறுவனத்தில் அவர்கள் பணியாற்றி திமுகவுக்கான உத்தி வகுப்பு மற்றும் செயல்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த  பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.  ஆளுங்கட்சியாக திமுக இருக்கும் கடந்த ஒரு வருடம் 3 மாதங்களில்  ஒவ்வொரு மாசெவின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்பதை பற்றி  ஆழமாக விசாரித்து ஒரு ரிப்போர்ட் சபரீசனுக்கு போயிருக்கிறது.

அதில்  பச்சை, ஆரஞ்சு, சிகப்பு என்ற வகையில் மாசெக்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறார்கள். பச்சைப் பட்டியலில் இடம்பெறும் மாசெக்கள் சிறப்பாக செயல்படுகிறவர்கள். அவர்கள் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

ஆரஞ்சு நிற பட்டியலில் இருப்பவர்கள் பரவாயில்லை என்ற ரகத்தில் இருக்கிறார்கள். ஆனால் சிகப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாசெக்கள் சுமார் 15 பேர் இருக்கிறார்கள்.

இவர்களை மாசெ பதவியில் இருந்து மாற்றினால்தான் கட்சி எம்பி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்பதுதான் அந்த பட்டியலின் பரிந்துரை.

இந்த பச்சை, ஆரஞ்சு, சிகப்பு நிற தரவரிசைப் பட்டியல் திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினிடத்தில் தற்போது இருக்கிறது.

சில வாரங்களாகவே இந்தத் தகவல்  அரசல் புரசலாக தங்கள் காதுக்கு வந்த நிலையில் சிகப்பு பட்டியலில் இருக்கும் மாசெக்கள் தங்கள் பதவியை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதால் தங்களுக்கு வேண்டப்பட்ட பலரையும்  வைத்து தீவிரமான தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கட்சித் தலைவர் ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதுதான் திமுகவுக்குள் இப்போதுள்ள  எதிர்பார்ப்பு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

வெள்ளலூர் பேருந்து நிலையமும் வேலுமணியும்: பதில் சொன்ன ஆர்.எஸ்.பாரதி

+1
0
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published.