ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் பொங்கல் விழாவை திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக புறக்கணித்துள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 12) மாலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் மாநிலத்தின் அனைத்துக் கட்சியை சேரந்தவர்களும் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு என 1800 பேருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஆதீனங்கள், கிறிஸ்தவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டு வீரர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பிரதமரின் ‘மங்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்தாண்டு அனுப்பப்பட்ட தமிழக ஆளுநரின் பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு இலச்சினைக்கு பதிலாக இந்திய அரசின் இலச்சினை இடம்பெற்று இருந்தது.
மேலும் ’தமிழ்நாடு’ ஆளுநர் ஆர்.என்.ரவி என்ற பெயரை தவிர்த்து ’தமிழக’ ஆளுநர் என்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்று வரும் பொங்கல் விழாவை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். அவரோடு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் மொத்தமாக விழாவை புறக்கணித்து உள்ளனர்.
அதேவேளையில் ஆளுநரின் பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் கலந்துகொண்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சு: 215 ரன்களில் சுருண்ட இலங்கை
இந்திய கால்பந்து வீராங்கனைக்கு நேர்ந்த அவலம்