திமுக அமைச்சர்கள் மீதான வழக்கின் தீர்ப்புகளை சூமோட்டோ வழக்காக விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது நேர்மையை நிலைநாட்ட பதவி விலகி நீதிபதி என்ற நிலையை இழந்தாலும் வழக்கறிஞர் என்ற நிலையில் இதனை எதிர்கொள்வார் என்று எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லை என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று (ஆகஸ்ட் 25) சிலந்தி கட்டுரை வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இதில் பொன்முடி வழக்கு விசாரணையின் போது இதுபோன்ற மோசமான வழக்கு விசாரணைகளை தாம் பார்த்ததில்லை என்றும் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு வழக்கு விசாரணையின் போது கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை படித்துவிட்டு மூன்று நாட்களாக தூங்கவில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அமைச்சர்கள் மீதான வழக்கின் தீர்ப்புகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அமைச்சர்கள் தொடர்பாக வழக்குகளில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்வோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் திமுக அமைச்சர்கள் மீதான வழக்கின் தீர்ப்புகளை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளதை முரசொலி சிலந்தி கட்டுரை கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து முரசொலி சிலந்தி கட்டுரையில், “இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது”. இது ‘பராசக்தி’ திரைப்படத்தின் நீதிமன்றக் காட்சியில் கதாநாயகன் உதிர்க்கும் வசன வரிகள்.
இப்போது அதுபோல் சில நீதிமன்றங்கள் விசித்திர தீர்ப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. விமர்சன எல்லைக்குள் சென்று விடக்கூடாது என்ற நிலையில் செயல்பட வேண்டிய நீதித்துறையை ஒரு சில நீதிபதிகள் தங்கள் செயல்பாட்டின் மூலம் அந்த எல்லைக்குள் தள்ளிவிடுவது வேதனைக்குரியதாக உள்ளது.
சமீபத்தில் Suomoto – அதாவது நீதிபதிகள் தானாகவே முன்வந்து எடுத்து நடத்த முன் வரும் வழக்குகள், அதற்காக அந்த நீதிபதிகள் கூறும் காரணங்கள் பலரது கண்களை அகல விரிய வைத்துள்ளது.
‘சுயமோட்டோ’ (Suomoto) வழக்குகள் என்பது மிகவும் எச்சரிக்கையுடன் எடுத்து நடத்தப்பட வேண்டியது என்பதை சட்ட வல்லுநர்கள் அறிவர். பொதுவாக சில வழக்குகள் முடிந்த பிறகு நீதிமன்றங்கள் புதிய ஆதாரங்கள் அல்லது கணிசமான ஆதாரங்களைக் கண்டறியும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்தச் சூழலில் வழக்கை மீண்டும் திறக்க அதிகாரம் உள்ளதே ஒழிய, தீர்ப்பை முடித்து வைத்த நீதிபதிகள், கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மீது மறைமுகமாகவோ நேரடியாகவோ உள்நோக்கம் கற்பிப்பது, நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையை தகர்த்து விடக் கூடிய செயலாகவே முடிந்து விடும்.
சமீபத்தில் திருவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்துள்ள வழக்குகள் இரண்டு குறித்து, ‘இந்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்தபோது, ஏதோ ஒன்று திருவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நடந்திருப்பதை நிதர்சனமாக உணரமுடிகிறது’ – என உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்திருப்பது எளிதாகக் கடந்து செல்லக் கூடிய ஒன்றல்ல.
இன்று அந்த நீதிபதி பயன்படுத்திய கருத்தை நாளை அவர் பங்கு வகிக்கும் உயர்நீதிமன்றத்தின் மீதும் சிலர் பயன்படுத்தலாம். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில், கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை வரவழைத்துப் படித்துப் பார்த்து பின்னர் தாமாகவே முன்வந்து மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை நோக்கும் போது அந்த கோர்ட்டில் (எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில்) ஏதோ நடந்திருப்பதை நிதர்சனமாக உணர முடிகிறது’ என்ற அளவில் சிலர் கருத்து வெளியிட வாய்ப்புகளை, அந்த நீதிமன்றத்தின் நீதிபதியே உருவாக்குவது ஏற்புடையதாகத் தெரிவில்லை” என்று தெரிவித்துள்ள சிலந்தி
தொடர்ந்து, “இது போன்ற பொத்தாம் பொதுவான கருத்துகள் பெருகத் தொடங்கினால் நாளை ஒட்டு மொத்த நீதித்துறையும் மக்கள் மனதில் கேள்விக் குறியாகிவிடக் கூடிய நிலை உருவாகி விடாதா? மேலும் அமைச்சர் பொன்முடி மீதான வழக்குகளை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்புகளையும் இதே நீதிபதி தாமாக முன்வந்து (Suomoto) மேல் விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தார். அதற்கு அவர் தெரிவித்த காரணங்கள் விசித்திரமானது. விசித்திரமானது மட்டுமல்ல; கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் மீது சேற்றை வாரி வீசுவதாக உள்ளது. அந்த நீதிபதியின் முடிவுகளும், தான் எடுத்த முடிவுகளுக்கு அவர் கூறிய காரணங்களும் இன்று பெரும் விவாதப் பொருளாகி விட்டன.
அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விசாரித்தறிந்து வழங்கிய தீர்ப்பினை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி விமர்சிக்கிறார். தானாகவே முன் வந்து மேல்முறையீடாக விசாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த நீதிபதியின் நேர்மைக் குணம் போற்றப்பட வேண்டியதுதான். அதே நேரத்தில் அந்த நேர்மை இப்போது கேள்விக்குறியாகி, அவரது நடவடிக்கைகளுக்கு உள்ளர்த்தங்கள் கற்பித்தும், அதனை மறுத்தும் விவாதங்கள் தொடங்கி விட்டன.
‘‘அவர் நேர்மையான நீதிபதி. அநீதி எங்கு நடந்தாலும் கொதித்தெழுவார்’’ என்று எடுத்துக்காட்டுகளைக் கூறி சிலரும், “அவர் போக்கில் உள்நோக்கம் இருக்கிறது. கீழமை நீதிமன்ற நீதிபதிகளை சகட்டுமேனியாக சந்தேகிக்கிறார், அவருக்கு சம அந்தஸ்து உள்ள நீதி அரசர்களின் முடிவுகளை மட்டுமின்றி அந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கிய தலைமை நீதிபதி முடிவையும் விமர்சிக்கிறார்; அமைச்சர் பொன்முடி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டதையும் வேலூர் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் சந்தேகிக்கிறார். கீழமை நீதிமன்றங்கள் மட்டுமின்றி, சக நீதிபதிகள், ஏன் அன்றைய தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்ற விவகாரங்களை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளார்.
கீழமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்ற சக நீதிபதிகள், ஏன் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அத்தனை பேரின் செயல்பாட்டையும் ஒரு நீதிபதி கேள்விக் குறியாக்கியுள்ளார். நீதிமன்றங்களும், நீதியரசர்களும் இன்று ஊடக விவாதப் பொருளாகும் அளவு ஒரு நீதிபதியின் செயலாலும், அவர் எடுத்த முடிவுகளாலும் சர்ச்சைகளாகி விட்டன. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் விவாதப்பொருளாகி விட்டால், பின்னர் நாடு என்னாவது? நீதிமன்றத் தீர்ப்புகள் மீது கருத்தறிவிக்கவே அஞ்சிடும் நிலையிலிருந்த மக்கள் இன்று ஊடகங்கள் மட்டுமின்றி, தெருவுக்குத் தெரு, திண்ணைப் பேச்சுக்களில் விவாதிக்குமளவு, நீதிமன்ற நடவடிக்கைகள் மலிவாகி வருகின்றன.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த நீதிமன்றமே விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டது. ‘மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். கங்கையே சூதகமானால் எங்கே போவது’ என்பது போன்ற நிலை உருவாகிவிட்டது.
“அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு போன்றோர் மீதான வழக்குகளின் தீர்ப்புகளில் சந்தேகம் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, தெரிவித்த கருத்துகள் இப்போது விவாதப்பொருளாகிவிட்டன. அந்த நீதிபதியின் கருத்துகளுக்கு எதிரும் புதிருமாக விமர் சனங்கள் எழுந்துவிட்டன”
“நேர்மையான நீதிபதி தவறு எங்கு நடந்தாலும் பொறுக்க மாட்டார்”– என்று ஒரு சாராரும், நீதிபதி அறிவித்த கருத்துக்களில் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. இது மாதிரியான தீர்ப்புகள் எத்தனையோ இருந்தும் குறிப்பிட்ட தீர்ப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து, “சுயோமோட்டோ” வழக்காக விசாரிக்கப் போகிறேன். கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் சந்தேகங்கள் உள்ளன என்று கூறுவது உள்நோக்கம் கொண்டது என்று மற்றொரு சாராரும், ஒரு நீதிபதியின் முடிவை மட்டுமின்றி அவரையும் விவாதப்பொருளாக்கி விட்டனர்.
இந்த நிலையில் அந்த நீதிபதி, தனது நேர்மையையும் தனது முடிவையும் நிலைநிறுத்த தான் வகிக்கும் பொறுப்பினைத் துறந்து, அந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு வழக்கறிஞராக களத்தில் இறங்கி தனக்கு கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து வாதிட்டு நீதித்துறைக்குப் பெருமை சேர்ப்பது நலம். நீதித்துறையின் முடிவை விவாதப் பொருளாக்கி, நீதிபதியின் முடிவுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த நீதிபதி தனது நேர்மையை நிலைநாட்ட பதவி விலகி நீதிபதி என்ற நிலையை இழந்தாலும் வழக்கறிஞர் என்ற நிலையில் இதனை எதிர்கொள்வார் என எதிர்பார்ப்பதில் தவறு ஏதுமில்லையே. நீதி எல்லோருக்கும் பொதுவானது. அங்கு வர்ணாஸ்ரமம் வாலாட்டக் கூடாது. ஆதிக்க சக்திகள் அரசோச்சக் கூடாது.
“Injustice anywhere is a threat to justice every where” – “எங்கு அநீதி இருந்தாலும் அது நீதிக்கு எல்லா வகையிலும் அச்சுறுத்தலாகும்” – என மார்ட்டின் லூதர்கிங் கூறிய வாசகங்கள் சில நீதிபதிகள் நெஞ்சில் பதிய வேண்டியதாகும்” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
காலை உணவுத் திட்டம்: கலைஞர் பயின்ற பள்ளியில் துவக்கி வைத்த ஸ்டாலின்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!