டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் செய்யப்பட்ட சில துறைகள் மாற்றப் பட்டியலில் நிதியமைச்சர் பிடிஆருக்கு, இதுவரை அமைச்சர் ஐ.பெரியசாமி வகித்து வந்த புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டது.
தற்போது நிதித்துறை அமைச்சராக இருக்கும் பிஒடிஆர் தனக்கு கூடுதலாக புள்ளியியல் துறை வழங்கப்பட்டதில் இருந்து பட்ஜெட் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறார்.
கடந்த அதிமுக ஆட்சியிலும் புள்ளியியல் துறை என்பது கூட்டுறவுத் துறை, முன்னாள் ராணுவ நலத்துறையை வகித்து வந்த செல்லூர் ராஜூவிடமே இருந்தது. ஆனால் அப்போது புள்ளியியல் துறை என்பது பெரிதும் கவனம் பெறாத துறையாகவே இருந்தது. பிடிஆர் இந்த ஆட்சியில் நிதியமைச்சரானதும் புள்ளியியல் துறையும் தன் வசம் இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனென்றால் ஒவ்வொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யும் முன்னர் அந்த திட்டத்தால் பலன் அடைபவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட புள்ளி விவரங்கள் தேவை என்று கருதினார். இதனால் புள்ளியியல் துறை வேறு ஒரு அமைச்சரிடம் இருப்பதை விட நிதித்துறை அமைச்சரிடம் இருந்தால் திட்டம் தீட்டுவதற்கு முந்தைய நடவடிக்கைகள் உறுதியாக இருக்கும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி வந்தார் பிடிஆர்.
அதுபோலவே இப்போது புள்ளியியல் துறை பிடிஆரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கூட்டுறவு வங்கி நகைக்கடன்கள், தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற விவகாரங்களில் டேட்டா இல்லை என்றும் டேட்டா சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு தமிழக நிதித்துறை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டபோதும் அதன் பின்னரும் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் சரியான புள்ளி விவரங்கள் பராமரிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார் பிடிஆர்.
அதிமுக ஆட்சியில் புள்ளியியல் துறை சரியாக செயல்படவில்லை என்று 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞரே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. அப்போது கலைஞர், “தமிழக அரசின், புள்ளியியல் துறை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு துறை சார்பான புள்ளி விவரங்களை தயாரித்து புத்தகம் வெளியிடும்.
பொதுவாக இந்தப் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலேயே வழங்கப்பட்டுவிடும். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டுக்குரிய புத்தகம் (2015), இந்த ஆண்டு (2016) பிப்ரவரியில்தான் வெளிவந்திருக்கிறது. ஆனால் இன்று வரை இது விற்பனைக்கு வரவில்லை” என்று சுட்டிக் காட்டியிருந்தார் கலைஞர்.
அதிமுகவின் 2011-16 ஆட்சியில் நிலவிய இந்த நிலைமை எடப்பாடி ஆட்சி வரை நீடித்திருக்கிறது என்பதுதான் பிடிஆரின் தொடர் புகாராக இருந்தது. திமுக ஆட்சியிலும் கூட புள்ளியியல் துறை வேறு அமைச்சகமாக இருந்த நிலையில், அங்கிருந்து நிதியமைச்சகத்துக்கு புள்ளி விவரங்கள் உரிய காலகட்டத்துக்குள் கிடைக்கவில்லை என்று சொல்லி அதை விரைவுபடுத்திவந்தார் பிடிஆர்.
கடந்த ஆகஸ்டு மாதம், ‘‘Economic Policy in COVID-19 Times’ என்ற புத்தகத்தின் ஆங்கில வெளியீட்டையும், அதன் தமிழாக்கமான, ‘பெருந்தொற்றும் பொருளாதாரக் கொள்கையும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அந்த விழாவில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர், “அரசுக்கு சரியான, சுதந்திரமான தரவுகள் கிடைப்பதுதான் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதற்கு உதவியாக இருக்கும். இங்கே பெரிய முரண்பாடு என்னவென்றால், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் எங்களிடம் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்தத் துறையால் இதுவரை நான் எந்த வகையிலும் பயனடையவில்லை” என்று பகிரங்கமாகவே பேசினார். அதாவது புள்ளியியல் துறையால் நிதித் துறைக்கு எந்த பயனும் இல்லை என்று கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி வரை பேசியிருக்கிறார் பிடிஆர்.
இந்த சூழலில் நிதியமைச்சரிடமே புள்ளியியல் துறையும் வந்துவிட்டதால், தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த முக்கிய திட்டமான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்கிறார்கள் நிதியமைச்சக வட்டாரத்தில்.
பொருளாதாரக் கணக்கெடுப்புகளில் இருந்து மழை நீர் புள்ளி விவரம் வரை ஒவ்வொரு துறை சார்ந்த புள்ளி விவரங்களைத் தயாரிப்பதே இத்துறையின் பணி. தமிழகம் முழுதும் மாவட்டம், தாலுகாக்கள் அளவில் புள்ளியியல் துறைக்கான அலுவலகங்களும் அலுவலர்களும் இருக்கிறார்கள். இந்தத் துறை இப்போது பிடிஆர் வசம் வந்துவிட்டதால் பட்ஜெட்டுக்கு முந்தைய புள்ளி விவர சேகரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் நிதியமைச்சர்.
பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் மாநில ஆணையராக ஐ.ஏ.ஸ். அதிகாரி பிங்கி ஜோவல் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றியபோது அங்கே செயலாளராக பணியாற்றிய அமுதா விடுப்பில் சென்றபோது பிங்கி ஜோவல்தான் பொறுப்பேற்று செயல்பட்டார். இவர் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். பிடிஆரின் நோக்கத்தைப் புரிந்து செயல்படும் திறமையான அதிகாரியும் கூட. ஆனால் இவர் தற்போது தன் சொந்தக் காரணங்களால் லாங் லீவில் இருக்கிறார். .
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பொருளாதார விவகாரங்களில் தெளிவுபெற்றவர்கள் குறைவு. இந்த நிலையில் பிங்கி ஜோவலை மீண்டும் பணிக்கு வரவைப்பதா அல்லது பொருளாதார புள்ளியியல் துறைக்கான ஆணையராக வேறு ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிப்பதா என்ற ஆலோசனையும் நிதியமைச்சர் வட்டாரத்தில் நடப்பதாக சொல்கிறார்கள்.
”புள்ளியியல் துறை பிடிஆரின் கீழ் வந்துவிட்டதால் இனி அந்தத் துறை பரபரப்பாக செயல்படும். புள்ளி விவரப் பற்றாக்குறையால் நிதானமாக செயல்பட்டு வந்த திட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் இனி சூடுபிடிக்கும். அதனால் மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான பயனாளிகள் விரைவில் அறிவிக்கப்பட்டு அத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்” என்றும் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
புள்ளி வைத்து பிடிஆர் போடும் கோலம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்!
–ஆரா
அதிக சந்தோஷத்தில் அட்லி குடும்பம்: ஏன் தெரியுமா?
ஒரே ஆர்டர் ஸ்விகியை திரும்பி பார்க்க வைத்த பெங்களூர் வாடிக்கையாளர்!