உட்கட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கியது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவு!
கடந்த 3 நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் (செப்டம்பர் 25) நிறைவு பெற உள்ளது.
அதன்படி கடைசி நாளான இன்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களிடம் வேட்பு மனுக்களை பெற்று வருகின்றனர்.
அறிவாலயத்தில் தர்ணா போராட்டம்!
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தென்காசி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி வடக்கு மாவட்டத்திற்கான வேட்பு மனுத்தாக்கல் ஏற்கெனவே நிறைவு பெற்றுவிட்டது. இதில் அப்பகுதியின் பொறுப்பாளாரான செல்லதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலை நடத்தாமல் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமாரை மாவட்ட செயலாளராக நியமிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் அதிருப்தி அடைந்தனர். மேலும் பெரும் ஆதரவாளர்களுடன் இருக்க கூடிய தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளாரான செல்லதுரையை மாவட்ட செயலாளராக அறிவிக்க வேண்டும்.
இல்லையென்றால் முறைப்படி தேர்தல் நடத்தி மாவட்ட செயலாளரை நியமிக்க கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தி வரும் குழுவினருடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளான கே.என்.நேரு, ஆ.ராசா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
விரைவில் திமுகவில் இணைகிறாரா நயினார் நாகேந்திரன்?
தீபாவளி பண்டிகை : மோடி வைத்த கோரிக்கை!