தமிழகத்தில் ஆளும் கட்சியாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக இருக்கிறது. பிற கட்சியினர்தான் ஆளுங்கட்சியான திமுகவில் சேர்ந்து வருகிறார்கள்.
ஆனால் ஆச்சரியமாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (அக்டோபர் 6) அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்கள்.
அண்மைக்காலமாகவே திமுக அமைச்சர்கள் பொதுவெளியில் தரமற்ற முறையில் பேசிவருவதாக அவர்கள் மீது குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம்.
இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள்” என்று அமைச்சர்களை அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில்தான்… சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள எடப்பாடி பயணியர் மாளிகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான இ.பி.எஸ் தலைமையில்,
எடப்பாடி நகர் 22 வது வார்டு திமுக கவுன்சிலர் ரவி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் திமுக வில் இருந்து விலகி அதிமுக வில் இணைந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ.பி.எஸ், “முக்கிய பொறுப்பில் இருக்கின்றவர்கள், அதுவும் மூத்த அமைச்சராக இருக்கின்றவர் பொதுக்கூட்டத்தில் கட்டுப்பாடு இல்லாமல் கருத்தை வெளியிடுவது வேதனைக்குரியது.
ஏழை எளிய பெண்கள்தான் கட்டணம் இல்லாமல் பயணம் செய்கிறார்கள். அதை கொச்சப்படுத்தி பேசுவது சரிஅல்ல. இது வருந்தத்தக்கது.
இப்படித்தான் பல அமைச்சர்கள் மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
மழை நீர் வடிகால்கள் பல இடங்களில் முடியாமல் உள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி,
நிர்வாக திறமையற்ற முதல்வர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.
அது நிரூபணம் ஆகியிருக்கிறது, சென்னையை பொறுத்தவரை மழைக்காலங்களில் பணிகளை செய்தால் கனமழையின் போது ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமப்படுவார்கள்.
இதையெல்லாம் சரியாக முறையாக கடைப்பிடிக்காதத காரணத்தால் சென்னையில் பலவேறு வீதிகளில் பள்ளத்தை தோண்டிவிட்டு அந்த பணியை தொடராமல் இருப்பது வேதனைக்குரியது.
இந்த பணியை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்க வேண்டும். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக வலிமையாக இருக்கிறது.
33 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.
சிலபேர் வேண்டும் என்றே திட்டமிட்டு சிலபேரின் தூண்டுதலின் பேரிலே இந்த கட்சியை பிளக்கவோ உடைக்கவோ பார்க்கின்றார்கள்.
அது ஒருபோதும் நடக்காது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. விசாரணை விரைவில் முடியும். விசாரணை முடிந்த பிறகு பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும்.
கட்சியை உடைக்க வேண்டும் பிளக்க வேண்டும் என்று செயல்படுவர்கள் எல்லாம் விரைவில் காற்றோடு கரைந்து போவார்கள்.
100 சதவீதம் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறேன்” என்றார்.
பயணியர் மாளிகை என்பது அரசுக்குச் சொந்தமான பொது இடம். அந்த வளாகத்தில் பிற கட்சியினரை தன் கட்சியில் சேர்க்கும் அரசியல் நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் எடப்பாடி என்றும் கேள்விகள் சேலத்தில் எழுந்துள்ளன.
மு.வ.ஜெகதீஸ் குமார்
மூன்று சிறுவர்கள் பரிதாப மரணம்: விசாரணைக் குழுக்கள் அமைப்பு!