திமுக பொதுக்குழுவில் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (அக்டோபர் 9) சென்னை அமைந்தகரையில் திமுகவின் 15-வது பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிக மழை பெய்தாலும், மழையே பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள்.
ஒரு பக்கம் தமிழக முதல்வர். மறுபக்கம் திமுக தலைவர். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை.
இந்த சூழலில் என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள், அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் போய் கூறுவது.
நாள்தோறும் நம்மவர்கள் யாரும் புதிய பிரச்சனைகளை உருவாக்கிவிடக்கூடாது என்ற நினைப்போடு தான் கண் விழிக்கிறேன்.
அவர்களது செயல் சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் ஆக்குகிறது. என்னுடைய உடம்பை பார்த்தால் உங்களுக்கே தெரியும்” என்று உருக்கமாக பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
ஸ்டாலின் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடி சிரித்துக்கொண்டிருந்தார்.
இதனை குறிப்பிட்டு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்,” ஸ்டாலினுக்கு கட்சி நடத்த தெரியவில்லை. பொன்முடி ஓசி பஸ் குறித்து பேசிய போதே துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைக்கு அவர் மேடையில் உட்கார்ந்து சிரிப்பாரா?
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவில் பூசல்கள், குழப்பங்கள் ஏற்பட்டாலும் எடப்பாடி பழனிசாமி கடந்த நான்கு வருடங்களாக ஆட்சியையும் கட்சியையும் சிறப்பாக நடத்தினார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்தும், ராஜேந்திர பாலாஜியை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கினார். ஆனால் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார்” என்று கூறுகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுகவினர்,
“அதிமுகவில் குறிப்பிட்ட நாளில் முறையாக உட்கட்சி தேர்தலை நடத்தி பொதுக்குழுவை கூட்ட முடியுமா?
அப்படி பொதுக்குழுவை கூட்டினால் இறுதி வரை அந்த பொதுக்குழுவை பிரச்சனையில்லாமல் நடத்த முடியுமா?
யார் தலைமையில் அதிமுக கட்சி இயங்குகிறது என்றே தெரியவில்லை. அதிமுக தொண்டர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.
சீசனுக்கு ஒரு தலைவர் அதிமுகவில் உருவெடுக்கிறார்கள். மற்ற கட்சிகள் பொதுக்குழு எப்படி நடத்த வேண்டும் என திமுக பொதுக்குழுவை பார்த்து கற்று கொள்ள வேண்டும். கண்ணியத்துடன் பெருமையாக மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக, அழகாக நடைபெற்றது.
கலைஞர் பாணியில் ஸ்டாலின் திமுகவை வழிநடத்துகிறார். திமுகவினரிடம் எப்படி பேசினால் காரியம் நடக்கும் என்று ஸ்டாலினுக்கு தெரியும். ஸ்டாலினுக்கு கட்சி நடத்துவது பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம்” என்று திமுக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தை போர் நடந்து வருகிறது.
செல்வம்
இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
முலாயம் சிங் யாதவ் மறைவு : தலைவர்கள் இரங்கல்!