“வண்டிய ஓரமா நிறுத்த மாட்டியா?” – வியாபாரியை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர்!
சேலத்தில் வெள்ளி பட்டறை உரிமையாளரை திமுக பிரமுகர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
சேலம் அம்மாப்பேட்டை குலசேகர ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்த பகுதியில் வெள்ளி பட்டறை வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அந்த வழியாக தனது இன்னோவா காரில் திமுக பிரமுகர் ராஜா வந்துள்ளார்.
கண்ணனின் இருசக்கர வாகனம் மீது இன்னோவா கார் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்த கண்ணனின் உறவினர்கள் முற்பட்டபோது, ராஜா தொடர்ந்து காரில் அமர்ந்தவாறு ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார். ஹாரன் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த கண்ணன் கார் செல்வதற்கு வசதியாக தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.
அப்போது காரிலிருந்துகொண்டு ராஜா, “ஹாரன் அடிச்சா வந்து பார்க்கணும்…வண்டிய ஓரமா விடனும்…சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்ககூடாது” என்று அதட்டலாக கூறினார். அவர் சொல்வதை சரி என்று கேட்டுக்கொண்ட கண்ணன், கார் அவரது வீட்டை கடந்ததும் “வண்டிய ஓரமா தான் நிறுத்தியிருக்கேன்…இப்படி மிரட்டிட்டு போறாரு” என்று வேதனையுடன் தலையில் அடித்துக்கொண்டார்.
கண்ணனின் இந்த செயலை காரின் கண்ணாடி வழியாக பார்த்த ராஜா, காரிலிருந்து இறங்கி வந்து கண்ணனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு “ஏண்டா தலையில அடிச்சிக்குற” என்று மிரட்டலாக கூறி தனது காரை நோக்கி சென்றார்.
ஆளும் கட்சி கொடியுடன் காரில் சென்று தன்னை கேள்வி கேட்டவரை திமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
செல்வம்
உண்ணாவிரத போராட்டம் : உதயநிதி போட்ட உத்தரவு!
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!