“க்ளைமாக்ஸை இப்போதே கேட்டால் எப்படி”?: திமுக கூட்டணி குறித்து கமல்

அரசியல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 28) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் நாளை(மார்ச் 1) கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சிக்கு அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.

இக்கண்காட்சியை திறந்து வைக்குமாறு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் கமல்ஹாசன். இந்த கண்காட்சி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியை திறந்து வைத்தபின், அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி, ஆகியோருடன் சென்று பார்வையிட்டார் கமல்,

திமுகவில் உறுப்பினர் தொடங்கி மிசா காலம், போராட்டங்கள் என மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனது வரையிலான புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “இரவு பகலாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்.

அதற்கு காரணம் கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்தே அவரை எனக்குத் தெரியும். நெருங்கிய நட்பு இல்லை என்றாலும், எங்களுக்குள் நட்பு இருந்தது.
அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவருமே நிரூபித்து கொண்டிருக்கிறோம்.

மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக இருக்கும்போது சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும் சவால்களும் நிறைய உண்டு.

சந்தோஷத்தையும் அனுபவித்து சவால்களையும் ஏற்று படிபடியாக தொண்டனாக, இளைஞரணியின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணை முதல்வராக, முதல்வராக உயர்ந்துள்ளார்.

dmk makkal needhi maiam alliance

இது அவருடைய பொறுமையை மட்டும் அல்ல திறமையையும் காட்டுகிறது.
சரித்திரத்தை நாம் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

சரித்திரத்தை மாற்றி எழுத சிலர் துடித்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் பெரிய ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு சவால் விடுவது போல் நான் சரித்திரத்தை நினைவு கூர்ந்துகொள்ள வேண்டும். இல்லை என்றால் பெயர் மட்டுமே நினைவில் இருக்கும்.

நல்ல செய்தி தபாலில் வரும், கெட்ட செய்தி தந்தியில் வரும் என்று சொல்வார்கள். இது எல்லாம் நல்ல செய்தி. அதனால் தபால் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

அப்போது அவரிடம் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான சமிக்ஞையாக இதை எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “இது இப்போது பேச வேண்டிய நேரமல்ல. சீன் பை சீனாகத்தான் கதையை நகர்த்த வேண்டும். க்ளைமாக்ஸ் என்னவென்று இப்போதே கேட்கக்கூடாது.

இப்போது சொல்ல வேண்டியது முதல்வருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கலகலப்பாக பேசினார்.

பிரியா

வான்கடே ஸ்டேடியத்தில் சச்சினுக்கு காத்திருக்கும் பர்த்டே கிப்ட்!

பிச்சைக்காரன் 2’ ரிலீஸ் அப்டேட்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *