திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் ஜூன் 8ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வருகிற ஜூன் 14ஆம் தேதி கோவையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா-40 தொகுதிகளிலும் வெற்றி விழா-ஸ்டாலினுக்கு பாராட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா உள்ளிட்டவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் நீட் தேர்வு குறித்த கண்டனத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுகவின் புதிய மக்களவை கட்சியின் நிர்வாகிகள் யார் யார் என்ற விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
2019 -24 மக்களவையின் திமுக குழு தலைவராக டி. ஆர்.பாலுவும், துணைத்தலைவராக கனிமொழியும், கொறடாவாக ஆ.ராசாவும் செயல்பட்டனர்.
அதுபோல புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பி களின் மக்களவை குழு தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில்… இந்த கூட்டத்தில் பேசப்படவும் இல்லை விவாதிக்கப்படவும் இல்லை.
அறிவாலய வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது, “திமுக மக்களவை குழு தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
இதுவரை அப்பதவியை வகித்து வந்த கட்சியின் பொருளாளர் டி ஆர் பாலு மீண்டும் தனக்கே வேண்டும் என்று கேட்கிறார்.
ஆனால் மக்களவை குழு தலைவராக தான் வர வேண்டும் என கனிமொழி விரும்புகிறார்.
டி. ஆர். பாலு நீண்ட நெடுங்காலமாக டெல்லி அரசியலில் கோலோச்சி விட்டார். இங்கே தமிழக அமைச்சரவையில் அவரது மகன் டிஆர்பி ராஜா முக்கிய அமைச்சராக இருக்கிறார்.
இந்த நிலையில் மக்களவை குழு தலைவர் பதவியை மீண்டும் டிஆர்பாலுவுக்கு கொடுக்காமல் தனக்கு வழங்க வேண்டும் என்பதுதான் கனிமொழியின் காய் நகர்த்தல்.
2007 முதல் 13 வரை மாநிலங்களவை உறுப்பினர், மீண்டும் 2013 முதல் 19 வரை மாநிலங்களவை உறுப்பினர், 2019 முதல் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் என இதுவரை 17 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக அனுபவம் பெற்ற கனிமொழி இப்போது மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மாநில அரசியலில் உதயநிதியின் கை ஓங்கி வரும் நிலையில்… டெல்லி அரசியலில் தனக்குள்ள பிடிமானத்தை அதிகப்படுத்த நினைக்கிறார் கனிமொழி.
அதனால் மக்களவை குழு தலைவர் பதவி வேண்டும் என்று கருதுகிறார்.
கனிமொழி தரப்பிலும், டி.ஆர். தரப்பிலும் இது குறித்து முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில்… நேற்றைய கூட்டத்தில் இது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார். முடிவு கனிமொழிக்கு சாதகமாக இருக்கலாம்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
இது மட்டுமல்ல… “இந்தியா கூட்டணி மத்தியிலே வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால் கனிமொழி உள்ளிட்டோர் இந்நேரம் மத்திய அமைச்சராகி இருப்பார்கள்.
அதை அடிப்படையாகக் கொண்டு திமுக தலைமை வேறொரு திட்டமும் வகுத்து வைத்திருந்தது. அதாவது 2009 இல் அப்போதைய அமைச்சர் ஸ்டாலினை துணை முதலமைச்சராக முதல்வர் கலைஞர் நியமித்தார்.
ஃபேமிலி ஈக்குவேஷன் காரணங்களால் அதே நேரம் அழகிரி அங்கே மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.
இதே போல இப்போது கனிமொழி மத்திய அமைச்சர் பதவி ஏற்கும் அதே நேரம், இங்கே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார் ஸ்டாலின்.
இந்தியா கூட்டணி தற்போது ஆட்சி அமைக்காத நிலையில்… கனிமொழிக்கு மக்களவை திமுக குழு தலைவர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் இங்கே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படலாம் என்று ஆலோசனையும் நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் நடப்பதை அறிந்த சில சீனியர்கள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : சென்னை சிஎஸ்சிஆர்-ல் பணி!
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் தயார்: அமைச்சர் பெரியகருப்பன்
ஹெல்த் டிப்ஸ்: இயர் பட்ஸ் பயன்பாடு… கட்டுப்பாடு அவசியம்!
பியூட்டி டிப்ஸ்: முக அழகை பாதிக்குமா பல் சொத்தை?